மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 டிச 2021

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

அதிமுகவில் அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன.

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நேற்று டிசம்பர் 1ம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கூடியது இந்த கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகளை திருத்தும் வகையில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதன்படி அதிமுகவின் தலைமைப் பதவிக்கான ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையை மாற்றி அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கு மறுநாளான இன்று அதிமுகவின் உட்கட்சி அமைப்புத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழுவின் சிறப்புத் தீர்மானத்தின் படி, ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளரை ஒரே வாக்கின் மூலம் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிமுக கட்சி தொடங்கப்பட்ட போது அதன் தலைமை பதவியான பொதுச் செயலாளர் பதவியை அடிப்படை உறுப்பினர்களான தொண்டர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்று சட்டம் கொண்டு வந்தார் எம்ஜிஆர். அதுவே தொடர்ந்து நீடித்தது. 2016ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக அதிமுக உடைந்தது.

2017 ஆம் ஆண்டு சசிகலாவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடியும் இணைந்து பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்படுகிறது என்றும் அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்படுகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று நடந்த செயற்குழுவில் பொதுச் செயலாளர் பதவியை போலவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று திருத்தப்பட்டது. இந்த அடிப்படையில் இன்று (டிசம்பர் 2) அதிமுக கட்சியின் அமைப்பு தேர்தல் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நடவடிக்கைகள் டிசம்பர் 3ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பதவிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 3, 4 தேதிகளில் நடைபெறுகின்றன. வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி நடக்கிறது .வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு டிசம்பர் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தல் ஆணையர்களாக அமைப்புச் செயலாளர் பொன்னையன், தேர்தல் பிரிவுச்செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருக்கும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும் அதற்கு அடுத்த இடத்துக்கு வந்தவர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கின்றார்கள் அதிமுக வட்டாரத்தில்.

இந்த நிலையில் தற்போது இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் வற்புறுத்திவருகின்றனர். இதனால்தான் அதிமுகவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழக வட்டாரங்களில் பேசினோம்.

“கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற என்ற பிரச்சினை வந்தபொழுது பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்ததால் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை ஓ பன்னீர்செல்வம் கடைசிவரை தாமதித்து கேபி முனுசாமியின் சமரசத்தின் பேரில் தன் வாயாலேயே அறிவித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் சட்டமன்ற தலைவர் அதாவது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்காக மே 7ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றபோது பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுகு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் வர வேண்டாம் என்ற அறிவிப்போடு மே 10ஆம் தேதி மீண்டும் கூட்டம் கூடியது.

அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் சபாநாயகர் தனபாலை ஓ பன்னீர்செல்வம் முன்மொழிய அதற்கு எடப்பாடி ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். தேவைப்பட்டால் ஓட்டுப்பெட்டி வைத்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கமிட, தனக்கு ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த ஓ பன்னீர்செல்வம் அந்த கூட்டத்திலிருந்து வெளிறிய முகத்தோடு வெளியேறினார். அதற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மாலையே பன்னீர்செல்வத்தின் வீடு தேடிச் சென்று அவரிடம் வாழ்த்து பெற்ற எடப்பாடி பழனிசாமி... எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வம்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படியே முரண்டுபிடித்த ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தனது இரண்டாம் நிலையை ஒப்புக் கொண்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார்.

இதை இப்போது நினைவு படுத்த வேண்டியது ஏனென்றால்... அதிமுக எம்எல்ஏக்கள் ஆக இருந்தாலும் சரி, மாவட்டச் செயலாளர்களாக இருந்தாலும் சரி... அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்களானாலும் சரி... அவர்கள் மத்தியில் பன்னீரா எடப்பாடியா என்றால் எடப்பாடிக்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது.

எனவேதான் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடிபழனிசாமியை வேட்பு மனு தாக்கல் செய்யச் சொல்லி நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறு அவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட்டால்.... தேர்தல் நடக்கும் பட்சத்தில் பன்னீர் செல்வத்தை விட எடப்பாடிக்கு தான் அதிக வாக்குகள் கிடைக்கும். ஏற்கனவே முதல்வர் வேட்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய தருணங்களில் கட்சியில் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பக்கம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் எடப்பாடி பழனிசாமியை வேட்பு மனு தாக்கல் செய்யச் சொல்லி அவரது அவருக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து அவரை வலியுறுத்தி வருகின்றனர். எடப்பாடி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம்” என்கிறார்கள்.

அதிமுகவில் சட்டென மாறுது வானிலை!

-ராகவேந்திரா ஆரா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வியாழன் 2 டிச 2021