எம்.பி.க்கள் சஸ்பெண்ட்- பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்: வெங்கையா நாயுடு

politics

12 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் மூன்றாவது நாளாக காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த மழைக்கால கூட்டத் தொடர் இறுதி நாளில் மாநிலங்களவையில் வன்முறை நடத்தையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பிக்கள், சிவசேனை கட்சியைச் சேர்ந்த 2 எம்.பிக்கள், இடதுசாரி கட்சிகளை சேர்ந்த 2 எம்.பிக்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் கலந்துகொள்ளக்கூடாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கை என்பது ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயல் என்று மூன்று நாட்களாக தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள், காந்தி சிலை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எம்பிக்கள் மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெறுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறிய நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இன்றைய தினம் திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே சமயத்தில் நான்காவது நாளாக மாநிலங்களவை இன்று கூடியவுடன் எம்.பிக்களின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய வெங்கையா நாயுடு, உங்களின் தவறான நடத்தைக்கு நீங்கள் மன்னிப்பு கேட்க மாட்டீர்கள். ஆனால் சபையின் விதிகளின் கீழ் எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்ய வலியுறுத்துகிறீர்கள். இது ஜனநாயகத்தின் கொள்கைகளை நிலை நிறுத்துவதாக அமையுமா?

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் நிலவிவரும் நெருக்கடி நிலை குறித்து எதிர்க்கட்சிகளும் அரசும் கலந்து பேச வேண்டும். மாநிலங்களவை அதன் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

மேலும் அவர், “இதுபோன்று எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது முதன்முறை அல்ல. 1962 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 11 முறை அன்றைய அரசாங்கங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்படியானால் அது எல்லாம் ஜனநாயக விரோதமா?

12 உறுப்பினர்கள் இடை நீக்கத்தை பலரும் ஜனநாயக விரோதமானது என்று கூறுகின்றனர். ஆனால் எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்யும் உரிமை சபாநாயகருக்கு இருக்கிறது. அவை விதிகளின்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நான் செய்தது தவறு என்று நாடாளுமன்றத்தின் எந்த விதிகளிலும் குறிப்பிடப்படவில்லை. நான் செய்தது தவறு என்று எதிர்க்கட்சியினர் எப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தவறு என்று சொல்பவர்கள் எம்.பிக்கள் செய்த தவறை பற்றி பேசுவதில்லை. உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரினால் சஸ்பெண்ட் நடவடிக்கையை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *