மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 டிச 2021

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருந்ததாக சொல்கிறார்கள் அதில் பங்கேற்ற செயற்குழு உறுப்பினர்கள்.

அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் சுமார் 260க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். செயற்குழுக் கூட்டத்துக்கு முதல் நாள் இரவுதான் கட்சியின் முன்னாள் எம்பியும்,மூத்த முன்னோடித் தலைவருமான அன்வர் ராஜா அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டிருந்தார்.

நவம்பர் 24 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா, ‘சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் எல்லாம் தலைவர்களுக்கான தேர்தல்கள். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் ஒன்றுதான் தொண்டர்களுக்கான தேர்தல். எனவே அதிமுக வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துநின்று தொண்டர்களுக்கு முழுமையான வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்” என்று கேட்டார். அதாவது கடந்த தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பாஜகவும் இல்லாமல் அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் அன்வர் ராஜாவின் கருத்து. ஆனால் அதன் பின் சி.வி. சண்முகம் அன்வர் ராஜா மீது கிளப்பிய பிரச்சினை, அதன் பின் அன்வர் ராஜா மன்னிப்பு கேட்டது போன்றவற்றால் விஷயம் திசை மாறிவிட்டது.

மீண்டும் செயற்குழுக் கூட்டத்துக்கு அன்வர் ராஜா வந்தால் பிரச்சினையைக் கிளப்புவார் என்று கருதியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த சில தினங்களாகவே எடப்பாடிக்கும்,, பன்னீருக்கும் மனக் கசப்பு இருக்கிறது என்றும், பாஜக கூட்டணி தேவையில்லை என்றும், சசிகலாவை சேர்க்க வேண்டும் ஓப்பனாக பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் மாலையே அன்வர் ராஜாவை நீக்க முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி, இதை ஓ.பன்னீர் செல்வத்திடமும் சொல்லிவிட்டு, அதனால் ஏற்படும் அதிர்வை சமாளிக்க தமிழ் மகன் உசேனை அவைத் தலைவராக்கலாமென்றும் கூறியிருக்கிறார். இந்தத் தகவல் நேற்று முன் தினம் மாலையே அன்வர் ராஜாவுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் அவர் ராமநாதபுரத்தில் இருந்து செயற்குழுக் கூட்டத்துக்காக சென்னைக்குப் புறப்படவே இல்லை.

இந்தப் பின்னணியில் அன்வராஜா நீக்கம் பற்றிய சலசலப்புகள் கொஞ்சமாவது எழும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அன்வர் ராஜாவுக்கே இந்த நிலை என்றால் என்ற நினைப்போ என்னவோ கூட்டத்தில் எந்த சலசலப்பும் இல்லை. காலை10.20 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டம் ஆரம்பித்ததுமே புதிய தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகேன் உசேன் நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீரும், எடப்பாடியும் அறிவித்தனர்.

தீர்மானங்களை கே.பி. முனுசாமி. வைத்திலிங்கம், வைகைச் செல்வன் உள்ளிட்டோர் வாசித்தனர். அதன் பின் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “அம்மாதான் என்னை முதல்வராக அடையாளம் காட்டினார்கள். அம்மாவின் பிள்ளைகளான நாம் ஒன்றாக இருந்து அம்மா காப்பாற்றிய இந்த கட்சியை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். ஈகோவை மறந்து நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்”என்று பேசினார்.

அதன் பின் பேசிய எடப்பாடி பழனிசாமியின் மொழியிலும், உடல் மொழியிலும் முன்பை விட கடுமை தெரிந்தது.

“எல்லாரும் ஒற்றுமையாக இருப்போம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் ஆளுங்கட்சியால் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டும். என் பக்கத்தில் இருக்கிறார், எனக்கு ஆதரவாக இருப்பார், எனக்கு உறவினர், நண்பர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் சீட் கொடுக்காதீர்கள். தீவிர கட்சிக்காரனா, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவரா, பணம் செலவு செய்யக் கூடியவரா என்பதையெல்லாம் பார்த்து உள்ளாட்சித் தேர்தலில் சீட்டுக் கொடுங்கள். அப்போதுதான் நமக்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது. அதுபோல கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீக்கப்படுவார்கள். இதை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

“முதலில் பாமகவை விமர்சித்துப் பேசிய புகழேந்தியை கட்சியை வீட்டு நீக்கினார். இப்போது பாஜகவை விமர்சித்துப் பேசிய அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் எடப்பாடி. இதற்கு கட்சியின் உயரிய அமைப்பான செயற்குழுவில் எந்த எதிர்ப்பும் இல்லை. எனவே கட்சிக்குள் தனது இடத்தை உறுதியாக்கிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. தன்னையோ தனது முடிவுகளையோ எதிர்ப்பவர்கள் எவ்வளவு மூத்தவர்களாக இருந்தாலும் முக்கியமானவர்களாக இருந்தாலும் அவர்கள் நீக்கப்படுவது உறுதி என்ற மெசேஜை செயற்குழு மூலம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இது நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியவில்லை.ஆனால் இதுதான் இப்போதைய அதிமுகவின் நிலைமை” என்கிறார்கள் தலைமைக் கழக நிர்வாகிகள்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வியாழன் 2 டிச 2021