மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 நவ 2021

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை ரெய்டு, குட்கா முறைகேடு போன்ற புகார்கள் பரபரப்பாக பேசப்பட்டன. ஆனால் கேரளாவில் நகைக் கடைகளில் நகை பெற்றுக் கொண்டு பணம் தராமல் மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விஜயபாஸ்கரை கேரளாவுக்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை.

2016 ஆம் ஆண்டில் கேரளாவில் நகை வியாபாரம் செய்யும் ஒரு பெரிய நிறுவனம் ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் மீது போலீசில் புகார் அளித்தது. ’எங்கள் கடையில் இருந்து 2.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை பெற்றுக் கொண்ட ஷர்மிளா அதற்கு பணம் கொடுக்கவில்லை’ என்பதுதான் அந்த நிறுவனத்தின் புகார். இந்தப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அங்கமாலி போலீஸார் ஷர்மிளாவிடம் விசாரித்தபோது, ‘இந்த நகை என்பது எனக்கு கிடைத்த கமிஷனாகும். நான் தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு நகை வாங்கிக் கொடுத்தேன். நகைக்கடையிடம் இருந்து தங்கத்தைப் பெற்றது தமிழகத்தில் (அப்போதைய) அமைச்சரான விஜயபாஸ்கர்தான்” என்றும் ஷர்மிளா போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க ஆரம்பித்தது. “கமிஷனே இரண்டரை கோடி ரூபாய் என்றால் பெரிய அளவில் தங்கம் வாங்கப்பட்டிருக்க வேண்டும்”என்பதால் இதுகுறித்து விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தது அமலாக்கத்துறை.

அதன் அடிப்படையில் நேற்று (நவம்பர் 29) அமலாக்கத்துறை விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி அவரை கேரளாவுக்கு வரவழைத்தது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்து வரும் கொச்சி அமலாக்கத்துறை, விஜயபாஸ்கரை நேற்று காலை 10. 30 மணிக்கு கொச்சியில் இருக்கும் தனது அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதன்படி விஜயபாஸ்கரும் கொச்சியில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அப்போது ஷர்மிளா கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜயபாஸ்கரிடம் மாலை 7 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஷர்மிளா பெற்ற கமிஷனே இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் என்றால், அவர் விஜயபாஸ்கர் மூலம் அந்த நகைக்கடையில் வாங்கியது எத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் என்று அமலாக்கத்துறையினர் மதிப்பிட்டு சந்தேகப்படுகின்றனர். இதன் அடிப்படையில்தான் இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் முதல் வாரத்திலேயே விஜயபாஸ்கர் மீது ஷர்மிளா நெல்லை போலீசில் புகார் அளித்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் விஜயபாஸ்கர் விசாரணைக்குப் பிறகு வெளியிட்டுள்ள செய்தியில், “கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா ராஜீவ் என்பவர், திருநெல்வேலியில் என் மீது ஏற்கனவே ஒரு புகாரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். எனது வழக்கறிஞர் மூலம் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். குற்றப் பின்னணி கொண்ட ஷர்மிளா தொடர்பான ‘சாட்சி சம்மன்’ அடிப்படையில், நான் அமலாக்க இயக்குநரகம் (ED) முன் ஆஜரானேன்” என்று விளக்கம் அளித்துள்ளார் விஜயபாஸ்கர்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

செவ்வாய் 30 நவ 2021