மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 நவ 2021

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ரியாக்‌ஷன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

மதிமுக தலைமைக் கழக செயலாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டார். அன்று தாயகத்தில் நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு துரை வைகோ கட்சியில் இணைக்கப்பட்டதாகவும், அவருக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

துரை வைகோ கட்சிக்கு வந்திருப்பதன் மூலம் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டிருப்பதாகவும், கட்சி தனது சின்னமான பம்பரத்தில் தொடர்ந்து நின்று தனித்துவத்தை மீண்டும் நிலைநாட்டும் என்றும் அந்தக் கூட்டத்திலேயே மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பலர் பேசினார்கள்.

ஆனால்.... அன்று நடந்த கூட்டத்தில் மதிமுகவின் இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொள்ளாததோடு, மறுநாளே மதிமுகவில் இருந்து அவர் விலகினார். மதிமுக அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் தன்னால் அக்கட்சியில் தொடர முடியவில்லை என்று தெரிவித்து வைகோவுக்கு கடிதம் எழுதினார் ஈஸ்வரன்.

ஈஸ்வரன் எந்தக் கட்சிக்கும் போகாமல் தனித்த இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்தார். அதேநேரம் துரை வைகோவின் வருகைக்குப் பிறகும் கூட மதிமுகவில் இருந்து விலகுவதற்கான மாவட்டச் செயலாளர்களின் திட்டம் நீடிக்கிறது என்பதுதான் இப்போதைக்கு மதிமுகவில் இருந்து கிடைக்கும் தகவல்.

திமுகவில் இருந்து வெளியேறி வைகோவுடன் சென்ற செஞ்சி ராமச்சந்திரன் மீண்டும் திமுகவுக்கு சென்றார். கோவை கண்ணப்பன் திமுகவுக்கு சென்றார். மதிமுக பொருளாளராக இருந்த மாசிலமாணி திமுகவுக்குச் சென்றார். இதேபோல பலர் மதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்றிருக்கிறார்கள். இப்போது கூட திமுகவுக்கு செல்லும் திட்டத்தோடு இன்னும் சில மாவட்டச் செயலாளர்கள் மதிமுகவில் வெளியே சிரிப்பும் உள்ளே புழுக்கமுமாய் இருக்கிறார்கள்.

இதுகுறித்து திமுக, மதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

“மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்ற தனி மனிதருக்காகவும், அவர் மேல் உள்ள பிரியத்துக்காகவும்தான் இன்னும் பல நிர்வாகிகள் மதிமுகவில் இருக்கிறார்கள். அரசியல் ரீதியாக எந்த ஆதாயமும் இல்லை என்றால் கூட அவர்களை இங்கே இருத்தி வைத்திருப்பது வைகோ என்ற வார்த்தைதான். சில ஆண்டுகளுக்கு முன் வைகோவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் கொரோனா ஊரடங்கும் ஏற்பட்டது. இதனால் பல மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ பழைய மாதிரியான தொடர்பில் இல்லை. ஊரடங்கு காலத்திலேயே காணொலிக் காட்சி மூலம் கூட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். ஆனாலும் வைகோவின் உடல் நலன் கருதி அவரும் அடிக்கடி மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்புகொள்வதில்லை. மாசெக்களும் தலைவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரை தொடர்புகொள்வதில்லை. இந்த இடைவெளி ஏற்பட்ட நிலையில்தான் இப்போது துரை வைகோவை தலைமைக் கழக செயலாளராக அறிவித்திருக்கிறார் வைகோ. வாரிசைத் திணித்தார் என்ற பழி தன் மேல் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே வாக்கெடுப்பெல்லாம் நடத்தினார் வைகோ.

ஆனாலும் வைகோவை பார்த்த இடத்தில் துரை வைகோவை பார்ப்பதற்கு பல மாசெக்களுக்கு மனமில்லை. மாசெக்களிடம் பேசி உறுதிப்படுத்திக்கொண்ட பின்புதான் வைகோ இந்தத் வாக்கெடுப்பையே நடத்தினார். துரைவைகோவுக்கு எதிராக வாக்களித்து வைகோவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த பலரும் விரும்பவில்லை. அதனால்தான் ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால், ’மதிமுகவின் அடுத்தடுத்த ஆண்டுகள் சோதனைக்கிடமான ஆண்டுகளாக மாறும்’ என்று கணக்கு போடும் மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் சேருவதற்கு தயாராகிவிட்டார்கள். மதிமுகவுக்குள் இருந்துகொண்டு திமுகவின் சின்னத்தில் நிற்பதற்கு நேரடியாக திமுகவிலேயே சேர்ந்துவிடலாம் என்று அக்கட்சியின் 17 மாவட்டச் செயலாளர்கள் திமுகவோடு பேசி வருகிறார்கள்.

தத்தமது திமுக மாசெக்கள் மூலமும் திமுக தலைமைக்கு நெருக்கமான சிலர் மூலமாகவும் இந்த முயற்சியில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். இந்தத் தகவல் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தகவலைக் கேட்டதுமே ஸ்டாலின் முகம் சுருங்கிவிட்டது,’ஏற்கனவே வைகோ நம்மைப் பற்றி பல விதமாக பேசியிருக்கலாம். ஆனால் இப்போது திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது கட்சியின் மாவட்டச் செயலாளர்களை நாம் சேர்த்துக் கொள்வது சரியாக இருக்குமா? நாம் இதுவரைக்கும் கூட்டணிக் கட்சியினரை சேர்த்துக் கொண்டதில்லையே’என்று தனக்கு இந்த தகவலை தெரிவித்த திமுக நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

‘’ஏற்கனவே இதேபோலத்தான் காங்கிரஸ் கட்சியின் ராயபுரம் மனோ நம் கட்சிக்கு வர விரும்பினார். ஆனால் நீங்கள் கூட்டணிக் காரணத்தை சொல்லி அவரை சேர்த்துக்கொள்ள யோசித்தீர்கள். அதனால் அவர் அதிமுகவுக்கு சென்றுவிட்டார். மதிமுகவின் மாசெக்களும் அப்படித்தான். அவர்களுக்கு அங்கே இருப்பது உகந்தது இல்லை என்று கருதிதான் நம்மிடம் பேசுகிறார்கள். நாம் சேர்த்துக் கொண்டால் இங்கே வருவார்கள். இல்லையென்றால் அவர்கள் அதிமுகவுக்கு போய்விடுவார்கள் . தாய்க் கழகம் என்ற வகையில் அவர்களின் முதன்மை நோக்கம் திமுகவில் சேருவதுதான்’ என்று ஸ்டாலினிடம் எடுத்துரைத்திருக்கிறார்கள் மதிமுகவினரோடு டச்சில் இருக்கும் திமுக நிர்வாகிகள். ஆனாலும் ஸ்டாலின் இதற்கு சம்மதிக்கவில்லை. ‘யோசிப்போம்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார்.

இதற்கிடையே திமுகவுக்கு படையெடுக்க முடிவு செய்த மதிமுக மாசெக்கள் ஸ்டாலினை சமாதானப்படுத்துவதற்காக கோவை கண்ணப்பனை அணுகியிருக்கிறார்கள். மூத்த திமுக காரரான கண்ணப்பன் மதிமுகவை வைகோ உருவாக்கியபோது அவருடன் சென்றவர். பின்னர் திமுகவுக்குத் திரும்பியவர். கண்ணப்பனுக்கு நெருங்கிய நண்பரான முரசொலி செல்வம்தான் அப்போது கண்ணப்பனுக்காக கலைஞரிடமும், ஸ்டாலினிடமும் பேசி அவரை திமுகவுக்கு மீண்டும் கொண்டுவந்தவர். எமர்ஜென்சி காலத்தில் கலைஞருக்கு காரோட்டுவதற்கு பலரும் தயங்கி ஒதுங்கியபோது துணிச்சலாக கலைஞருக்கு காரோட்டியவர் கண்ணப்பன். இதனால் காரோட்டி கண்ணப்பன் என்று பிரியமாக கலைஞரால் அழைக்கப்பட்டவர்.

தற்போது திமுகவில் இருக்கும் அவரிடம் சென்ற மதிமுக மாசெக்கள்,’நீங்கள் செல்லும்போது இருந்தததை விட மதிமுகவின் நிலை தற்போது மோசமாக உள்ளது. இந்த நிலையில் நீங்கள்தான் ஸ்டாலினிடம் பேசி எங்களை திமுகவில் சேர்த்துக் கொள்வதற்கு அவரை சம்மதிக்க வைக்க வேண்டும்’என்று கூறியிருக்கிறார்கள். அவரும் தான் முயற்சிப்பதாக சொல்லியனுப்பியிருக்கிறார்.

இந்தத் தகவல்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கிடைக்க, அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். திமுகவுக்கு செல்லக் கூடும் என்று கருதப்படும் மாவட்டச் செயலாளர்களை உடனடியாக தொடர்புகொண்டிருக்கிறார். சில மாவட்டச் செயலாளர்களை நேரடியாகவும் சென்று சந்தித்திருக்கிறார் வைகோ. அதேநேரம் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான அமைச்சர் எ.வ.வேலுவையும் தொடர்புகொண்டு, இந்த விஷயங்களைக் கூறி உருக்கமாகப் பேசியிருக்கிறார் வைகோ.

தன்னிடம் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் பேசியதை கண்ணப்பனும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் ஏற்கனவே தன்னிடம் பேசிய சில திமுக சீனியர் நிர்வாகிகளிடம் சொன்னதையே கண்ணப்பனிடமும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ‘அப்பாவே இப்படி பண்ணதில்லையே... இப்ப வைகோ அண்ணன் கூட்டணியில இருக்கும்போது இது நல்லா இருக்குமா?’ என்றுதான் கண்ணப்பனிடமும் கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.

ஒரு பக்கம் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் சேருவதற்காக கண்ணப்பனிடம் பேசிக் கொண்டிருக்க, கண்ணப்பன் முதல்வர் ஸ்டாலினிடம் பேசிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் வைகோ தனது மாவட்டச் செயலாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதில் எந்த உரையாடலுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பது வரும்நாட்களில் தெரிந்துவிடும்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

செவ்வாய் 30 நவ 2021