மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 நவ 2021

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியை இன்று (நவம்பர் 28) அதிகாலை போலீஸார் கைது செய்தனர்.

எடப்பாடி அமைச்சராக இருந்தபோதே சேலத்தில் அவரது அலுவலக தனி உதவியாளராக இருந்தவர் மணி. முதல்வரான பின்னரும் எடப்பாடி இவரையே தனக்கு அருகில் வைத்திருந்தார். எடப்பாடிக்கு தேவையான அன்றாட விஷயங்களை செய்யும் பியூன் போன்ற உதவியாளர்தான் மணி.

அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில்தான்... அரசு வேலைக்காக மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் வெளியே வரத் தொடங்கினர். கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் தான் சேலம் மாவட்ட குற்றப் பிரிவில் மணி மீது அக்டோபர் மாதம் புகார் கொடுத்தார். தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் முதல்வரின் உதவியாளர் மணி 17 லட்சம் ரூபாய் தன்னிடம் பெற்று மோசடி செய்ததாக புகார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், மணி மற்றும் அவரது நண்பர் செல்வகுமார் ஆகியோர் மீது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெறுதல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்டக் குற்றப் பிரிவின் டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் விசாரணை செய்ய உத்தவிடப்பட்டது. இதனிடையே மணியிடம் பணம் கொடுத்த பலரும் அவரை நெருக்கத் தொடங்கினார்கள். ’வாங்கிய பணத்தைக் கொடுத்துவிடு, இல்லையென்றால் நாங்களும் புகார் செய்வோம்’ என்று அவர்கள் மணியிடம் எச்சரித்தனர். இதன் பேரில், தான் பணம் வாங்கிய மேலும் சிலரிடம் முழு பணத்தையும் கொடுக்காமல் அதில் ஒரு பகுதியை திரும்பக் கொடுத்திருந்தார் மணி. கொஞ்சம் டயம் கொடுங்கள் மீதி பணத்தையும் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார்.

இதற்கிடையே தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் மீதான வழக்கில் முன் ஜாமீன் பெறும் முயற்சியிலும் இறங்கினார். சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மணி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அம்மனு நவம்பர் 1 ஆம் தேதி தள்ளுபடியானது. முன்னாள் முதல்வரின் தனி உதவியாளர் என்பதால் சற்றும் சளைக்காமல் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் மணி. அங்கும் அவரது முன் ஜாமீன் மனு நவம்பர் 16 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

நவம்பர் 1 ஆம் தேதி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதில் இருந்தே வெளியே தலைகாட்டாமல் ஒதுங்கியேதான் இருந்தார் மணி. கிட்டத்தட்ட தலைமறைவு வாழ்க்கைதான் நடத்தி வந்தார். நவம்பர் 16 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் கூட உடனடியாக அவர் போலீசாரால் கைது செய்யப்படவில்லை.

காரணம், பணத்தைத் திருப்பிக் கொடுத்து புகாரை வாபஸ் வாங்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் எடப்பாடியின் தனி உதவியாளர். இதற்கு போலீஸாரிலேயே சிலர் ஒத்துழைப்பாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். ஆனபோதும் சட்ட நெருக்கடி அதிகமானதால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு பத்து நாட்கள் கழித்து எடப்பாடியின் தனிஉதவியாளர் மணி இன்று (நவம்பர் 28) அதிகாலை சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையப்பட்டி பகுதியில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

தனது தனி உதவியாளர் மணி கைது செய்யப்படுவதைத் தவிர்க்க சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு முயற்சிகளை செய்தார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் மணி இத்தனை நாட்கள் வெளியே இருக்க முடிந்தது என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள். அவர்களிடம் மேலும் பேசினோம்.

“ எடப்பாடி பழனிசாமிக்கு ஏழரை சனி 2011 ஆம் ஆண்டு வரை இருந்தது. தனது தலைவி ஜெயலலிதாவைப் போலவே ஜோதிடத்திலும் மாந்த்ரீகத்திலும் எடப்பாடி தீவிர நம்பிக்கை கொண்டவர். எனவே ஏழரை சனிக்கான பரிகாரங்களுக்காக ஜெயலலிதாவுக்கு நெருக்கமான கேரள உன்னிகிருஷ்ண பணிக்கர் முதல் பல ஜோதிடர்களையும் பார்த்தார் எடப்பாடி.

அதன் படியே ஒரு ஜோதிடர் எடப்பாடியிடம், ‘ஏழரை சனி முடிந்து உங்களுக்கு அரசியல்ல பல்வேறு உயர்வுகள் காத்திருக்கு. ஆனா அதுக்கு ஒரு பரிகாரம் செய்யணும். உடல் ஊனமுற்ற ஒருவரை உங்க பக்கத்திலேயே வச்சுக்கணும். அப்படி வச்சிருந்தா ஏழரை சனி விட்ட பிறகும் விடாத சில தோஷங்கள் கூட நிவர்த்தியாகும்னு சொல்லியிருக்கார்.

அந்த ஜோதிடரின் வார்த்தைகளை அப்படியே நம்பும் எடப்பாடி அப்போது சேலம் புறநகர் மாவட்டத்தில் தனக்கு நெருக்கமான சிலரிடம், ‘நம்ம கட்சிக்காரனாக இருக்கோணும். உடல் ஊனமுற்ற பையனா இருக்கோணும். அழைச்சுட்டு வாங்க’ என்று சொல்லி தேடுதல் வேட்டையில் இறங்கினார். அப்படித்தான் தனக்கு நெருக்கமான நண்பரும் காடையப்பட்டி ஒன்றிய செயலாளருமான சித்தேஸ்வரனிடமும் கூறினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது கட்சியில் தீவிரமாக இருந்த தனக்கு அறிமுகமான மணி என்ற பையனுக்கு இடது காலில் சற்று ஊனம் இருப்பதைச் சொல்லிய சித்தேஸ்வரன் அவரை கூட்டி வந்து எடப்பாடியிடம் ஒப்படைத்தார்.

அன்று முதல் மணியை தன் கூடவே வைத்துக் கொண்டார் எடப்பாடி. ஜோதிடர் சொன்னதுபோலவே 2011 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஜெயித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகிவிட்டார். இதனால் மணி மீது எடப்பாடிக்கு பாசம் பரிவு அதிகரித்தது. சேலத்தில் எடப்பாடியின் அலுவலகத்தை பூட்டும் வரை எடப்பாடியோடு கூடவே இருப்பார் மணி. அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார். அதன் பின் தமிழக முதலமைச்சராகவும் எடப்பாடிக்கு ஜாக்பாட் அடிக்க அப்போதும் அவர் கூடவே இருந்தார் மணி. இந்த காலகட்டத்தில்தான் முதல்வரின் கூடவே இருப்பவர் என்ற வகையில் பல்வேறு கோரிக்கைகள் மணியிடம் கொண்டுசெல்லப்பட்டன. அவற்றில் பலவற்றை எடப்பாடியிடம் சொல்லி நிறைவேற்றித் தந்திருக்கிறார் மணி.

எடப்பாடியிடம் தனி உதவியாளராக 2011 இல் சேர்ந்த மணி அப்போது நூறு ரூபாய்க்கே கஷ்டப்பட்டவர். ஆனால் இப்போது அவருக்கு சில நூறு கோடிகள் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதையெல்லாம் விட சேலம் முதல் சென்னை வரையிலான எடப்பாடியின் பல்வேறு ரகசியங்கள் மணிக்கு தெரியும். இந்த நிலையில் மணி சிறைக்குள் சென்றிருப்பது எடப்பாடிக்கு டென்ஷனை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் அவரை வெளியே கொண்டுவர தீவிர முயற்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 28 நவ 2021