மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 நவ 2021

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையைப் போலவே தர்மபுரி மாவட்டத்திலும் மொத்தமுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. திமுகவால் ஒரு சட்டமன்றத் தொகுதியைக்கூட கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில்தான் தர்மபுரியில் திமுகவை வலுப்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சரும் அமமுக துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பனை திமுகவில் சேர்த்துக்கொண்டார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின். பழனியப்பனுக்கு இதுவரையில் பொறுப்பு கொடுக்கவில்லை என்றாலும் பரபரப்பாகக் கட்சி பணியாற்றி வருகிறார்.

இந்தச் சூழலில்தான், கோவை மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்ததுபோல், தர்மபுரி மாவட்டத்திற்கு வேளாண் துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நியமித்த திமுக தலைமை, அவருக்கு முக்கியமான அசைன்மென்ட்களையும் கொடுத்திருக்கிறது.

“தர்மபுரி மாவட்டத்தில் பாமக பலமாக இருந்ததாலும், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பொருளாதார பலத்தாலும், திமுக மாவட்டச் செயலாளர்கள் பலவீனத்தாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு சட்டமன்றத் தொகுதியில்கூட திமுக ஜெயிக்கவில்லை. ஏற்கனவே உடல்நலக் குறைவால் சிகிச்சையில் இருந்த அமைச்சர் எம்.ஆர்.கே தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து நவம்பர் 26ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்துக்கு விசிட் அடித்தார்.

காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியருடன் ரெவியூ மீட்டிங் நடத்திவிட்டு, இருளர்கள் குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து திமுக முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.

மாலையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மாவட்டச் செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் தர்மபுரி நகரச் செயலாளர் அன்பு என்பவர் பேன்ட் சட்டை அணிந்துகொண்டு வந்திருந்தார். அவரைப் பார்த்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘நீ யார்? நகரச் செயலாளர்தானே... இங்கே என்ன விருந்தா வைக்கிறாங்க? வெளியில் போய் திமுக கரை வேட்டி சட்டை போட்டுவிட்டு வாய்யா... இல்லைன்னா உள்ளே வராதே போயா’ என்று விரட்டி அனுப்பினார். நகரச் செயலாளர் வெளியில் ஓடிப்போய் புது வேட்டி வாங்கி கட்டிக்கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கோபத்திலிருந்த அமைச்சர் பன்னீர், ‘இங்கே இரண்டு மாவட்டச் செயலாளர்கள் இருக்கீங்க. ஒரு காரில் ஒத்த ஆளாக போய்விட்டு வர்றீங்க... அதிமுக,மாவட்டச் செயலாளர் போனால் அவர் பின்னால் பத்து கார் குறையாமல் போகுது. நூறு பேர் போறாங்க. இப்படி இருந்தால் எப்படி கட்சி வளர்ப்பீங்க? கிளை செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரையில் உள்ளவர்கள் அந்தந்தப் பகுதியில உள்ள நல்லது கெட்டதுக்கு போயிட்டு வாங்க. மக்களோட கஷ்டத்தில பங்கு எடுத்துக்குங்க’ என்று காட்டமாகப் பேசும்போது, மேடையிலிருந்த கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணியனும், மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் இன்பசேகரனும் மௌனமாக இருந்தார்கள்.

“கட்சி நல்லாயிருந்தால்தான் நீங்கள் நல்லா இருக்க முடியும். அதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கடந்த பத்து வருடமாக மாவட்டத்தை குட்டிச்சுவராகி வைத்திருக்கிறார், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன். தண்ணீர் வசதிகூட இல்லை. இந்த மாவட்ட மக்களுக்கு தேவையானதைப் பூர்த்தி செய்துகொடுப்போம். ஏரி குளங்களைத் தூர்வாரி நீர் நிரப்பிக் கொடுப்போம்.

வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் பத்து பேரூராட்சி, இரண்டு நகராட்சி முழுவதும் திமுக கைப்பற்ற வேண்டும். அதற்கான வேலைகளைத் திட்டங்களை நான் சொல்கிறேன். அதை நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கு என்ன உதவியோ, என்னிடம் கேளுங்கள். நான் செய்து கொடுக்கிறேன். ஆனால், நீங்கள் சாதி பாசத்தோடு அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஒதுங்கிப்போனால் விட மாட்டேன்” என்று பேசினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

கூட்டம் முடிந்ததும் மாவட்டச் செயலாளர்களான தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், அமமுகவிலிருந்து வந்துள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோருடன் 30 நிமிடம் மினி மீட்டிங் நடத்தினார் எம்.ஆர்.கே.

மாவட்டத்தில் என்ன பிரச்சனைகள் உள்ளது, உங்களுக்கு என்ன தடையாக உள்ளது என்று கேட்டுள்ளார். அதில் ஒருவர். ‘இங்கே பாமக சாதி சென்டிமென்ட் காரணமாக கொஞ்சம் பலமாக இருக்கிறது’ என்று சொல்ல, ‘எங்க மாவட்டத்தில் இல்லாத பாமகவா? அதையெல்லாம் நான் பார்த்துகிறேனே... பாமக மற்றும் அதிமுகவில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களை செலக்ட் பண்ணி இழுத்து வையுங்கள். முதல்வரை வரவழைத்து மிகப்பெரிய இணைப்பு விழா நடத்துவோம்’ என்று கூறிய எம்.ஆர்.கே. ‘அதேபோல் பழனியப்பனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள். அவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று இரண்டு மாவட்டச் செயலாளர்களிடமும் கூறியுள்ளார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

தர்மபுரியில் உள்ள பாமக பிரமுகர்களிடம் தொடர்புகொண்டு பேசி மனதைக் கரைத்து அவர்களை விரைவில் திமுகவில் இணைப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் எம்.ஆர்.கே.

தர்மபுரியில் எம்.ஆர்.கே.வின் விசிட்டையடுத்து அதிமுகவும், பாமகவும் திமுகவின் நடவடிக்கைகளை உற்று நோக்கி வருகின்றன.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 28 நவ 2021