மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 நவ 2021

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அவ்வப்போது இலேசான உரசல்கள் ஆங்காங்கே நடைபெறுவது தொடர் கதையாகிவிட்டது. அந்த வகையில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடந்த இரு நாட்களாக கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரை எதிர்த்து போராட்டம் நடத்தினார். நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் கலெக்டர் அலுவலகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய ஜோதிமணி நேற்று பிற்பகல் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

“கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIPமுகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!

நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் என்னோடு துணைநின்ற கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எமது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதர,சகோதரிகள்,ஊடக நண்பர்கள்,காவல்துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்”என்றெல்லாம் பலருக்கும் நன்றி தெரிவித்த ஜோதிமணி கரூர் மாவட்டத்தின் அமைச்சரான செந்தில்பாலாஜியை மட்டும் நன்றிப் பட்டியலில் தவிர்த்துவிட்டார்.

ஏற்கனவே ஜோதிமணிக்கும் செந்தில்பாலாஜிக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் மோதல் பற்றி மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம்.

இந்நிலையில் ஜோதிமணியின் இந்த போராட்டத்துக்குப் பின்னால் அமைச்சர் செந்தில்பாலாஜியும் இருந்திருக்கிறார் என்றும், அந்தப் போராட்டத்தை முடித்ததன் பின்னாலும் செந்தில்பாலாஜி இருந்திருக்கிறார் என்றும் கரூர் திமுக, காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

“சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை செந்தில்பாலாஜியோடு நட்போடு இருந்த ஜோதிமணி, அவர் அமைச்சரானவுடன் கரூர் மாவட்டத்தில் தனக்கான அரசியல் முக்கியத்துவம் குறைவதால் மெல்ல மெல்ல செந்தில்பாலாஜியின் நட்பு வட்டத்தில் இருந்து விலகினார். அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல்களுக்கு பிரச்சாரத்துக்கே ஜோதிமணி வரவில்லை.

இந்நிலையில்தான் ஒன்றிய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்படும் முகாமை தனது எம்பி தொகுதிக்கு உட்பட்ட மற்ற மாவட்டப் பகுதிகளில் நடத்திவிட்டார் ஜோதிமணி. அதாவது கரூர் எம்பி தொகுதிக்குள் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிறது. மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திருச்சி மாவட்டத்தில் வருகிறது. இங்கெல்லாம் இந்த முகாம்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டுவிட்டது. விராலிமலை சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிறது அங்கே தேதி குறிக்கப்பட்டு மழை காரணமாக நடத்த முடியவில்லை.

ஆனால் கரூர் மாவட்டத்தில் அந்த முகாம் நடத்தப்படுவதற்கு கலெக்டர் பிரபு சங்கர் ஒத்துழைக்க மறுக்கிறார், ஆறு மாதங்களாக தேதி கொடுக்க மறுக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார் ஜோதிமணி எம்பி. இதில் என்ன அரசியல் இருக்கிறது என்று புரியவில்லை என்றும் அவர் போராட்டத்தின் போது தெரிவித்திருந்தார். அந்த அரசியல் வேறு ஒன்றுமில்லை... ஒன்றிய அரசு நிறுவனத்துடன் சேர்ந்து எம்பி ஜோதிமணி நடத்த இருக்கும் மாற்றுத் திறனாளிகள் முகாம் நடத்துவது பற்றி மாவட்ட அமைச்சர் என்ற முறையில் செந்தில்பாலாஜியிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அமைச்சரிடமிருந்து பதில் வரவில்லை. திண்டுக்கல்லைப் போல தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட முகாமை முடித்துவிட்டு ஒன்றிய அரசு நிறுவனத்தின் முகாமை நடத்தலாம் என்று செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளார். இதற்காகவே கரூர் கலெக்டர் பிரபு சங்கர் கரூர் மாவட்டப் பகுதிகளில், அந்த முகாமை தள்ளிவைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். உடனே ஜோதிமணிக்கு கோபம் வந்துவிட்டது.

மற்ற மாவட்ட கலெக்டர்கள் எல்லாம் ஒத்துழைத்தபோது கரூர் கலெக்டர் மட்டும் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சைக் கேட்டு ஆடுகிறார் என்று தனது ஆதரவாளர்களிடம் சீறியுள்ளார். இதையடுத்துதான் திமுக- காங்கிரஸ் கூட்டணிக் கட்சி என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் செந்தில்பாலாஜியின் மீதான அதிருப்தியை உடனடி போராட்டமாக மாற்றினார்.

ஜோதிமணியின் போராட்டத்தைப் பார்த்துவிட்டு பாஜகவினர், ‘ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்துகிறது. இதை திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் எம்பியே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்’ என்று சமூக தளங்களில் பகிர்ந்தனர்.

இந்த நிலையில்தான் இந்த விவகாரம் அமைச்சர் செந்தில்பாலாஜி மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜோதிமணி காங்கிரஸ் எம்பி என்பதால், சட்டப்படி அவர் மேல் நடவடிக்கை எடுக்கவும் யோசித்த முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி நாடாளுமன்ற மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவிடம் பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அறிவுரைப்படி டி.ஆர்.பாலு அகில இந்திய காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான கே.சி. வேணுகோபாலிடம் பேசியுள்ளார். ‘ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் முறைப்படி நிறைவேற்றுவதில்லை என்று பாஜக பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பியாக இருந்துகொண்டு ஜோதிமணி அதை திமுக அரசின் ஒரு கலெக்டர் மீது சொல்வது நன்றாக இல்லை. அவர் நடந்துகொள்ளும் விதம் அலையன்ஸ் பார்ட்டியா, ஆப்போசிஷன் பார்ட்டியா என்ற கேள்வியை எழுப்புகிறது. நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால், இந்த போராட்ட அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று வேணுகோபாலிடம் கூறியுள்ளார் டி.ஆர்.பாலு.

உடனே வேணுகோபால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம், ‘ஜோதிமணியை இப்போதே போராட்டத்தை நிறுத்தச் சொல்லுங்க’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜோதிமணிக்கு டெல்லி எச்சரிக்கையை அழகிரி பாஸ் பண்ணியதை அடுத்தே போராட்டத்தை விலக்கிக் கொண்டார் ஜோதிமணி” என்று விளக்கினார்கள்.

இதையடுத்துதான் முதல்வர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்த ஜோதிமணி கரூர் மாவட்ட அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு நன்றி தெரிவிக்கவில்லை. அவர்தான் போராட்டத்துக்குக் காரணம் என்பதால் அவருக்கு நன்றி தெரிவிக்கவில்லை ஜோதிமணி.

ஜோதிமணிக்கும் செந்தில்பாலாஜிக்கும் இடையே நடக்கும் அரசியல் மோதலால் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. கரூர் மாவட்டத்திலும் இந்த முகாம் நடந்தால்தால்தான்...கரூர் எம்பி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கும் இந்த திட்டத்தால் பலன்கள் கிடைக்கும்,

மாற்றுத் திறனாளிகளுக்காக ஜோதிமணி எம்பி போராட்டம் நடத்திய அதே நாளில்... கரூர் மாவட்டம், புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

விரைவில் எம்பி ஜோதிமணியும் அமைச்சர் செந்தில்பாலாஜியும் இணைந்தே கரூரில் மாற்றுத் திறானாளிகளுக்கான முகாமை நடத்தவேண்டும் என்பதுதான் அரசியலைத் தாண்டிய கரூர் மாவட்டத்தினரின் ஆவல்!

-ஆரா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

சனி 27 நவ 2021