புதிய வகை கொரோனா: ஆறு நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்திய பிரிட்டன்!

politics

புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஆறு நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான நாடுகளில் புதிய பாதிப்பு மிக குறைந்த அளவிலேயே உள்ளன. எனினும், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாகப் பரவி வருவதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இந்த வாரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்த வைரஸின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளதாகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு நேற்று (நவம்பர் 26) முதல் நடைமுறைக்கு வந்தது. கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த ஆறு நாடுகளையும் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

எனினும், இந்த ஆறு நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், அரசு அங்கீகாரம் பெற்ற ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் புதிய வைரஸ் பரவல் குறித்து கவலையடைந்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி இந்தியா அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ தென்னாப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே நாடுகளில் இருந்துவரும் பயணிகளை விமான நிலையத்திலேயே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடத்தில் தீவரமாக பரிசோதிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இது சம்பந்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்துவரும் விமானங்களுக்கு நெதர்லாந்து அரசும் தடை விதித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *