மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

கலைஞர் உணவகம்: ஓபிஎஸ் கண்டனம்!

கலைஞர் உணவகம்: ஓபிஎஸ் கண்டனம்!

2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 700 உணவகங்கள் உள்ளன. ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்குப் பொங்கல், கலவை சாதங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு ஊரடங்கு காலத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. சமீபத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட போது கூட இலவச உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், கலைஞர் பெயரில் 500 உணவகங்கள் திறக்க இருப்பதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இந்நிலையில் புதிதாக எத்தனை உணவகம் திறந்தாலும் அதற்கு அம்மா உணவகம் என்றே பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் உணவகம் என்ற பெயரில் சமுதாய உணவகங்கள் திறக்கப்படும் என்று தெரிவித்திருப்பது "அம்மா உணவகம்" என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ ‘அம்மா உணவகம்’ என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு ‘கலைஞர் உணவகம்’ என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சி இது. புதிதாகத் திட்டங்களைத் தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது புதிதாகத் தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்குக் கலைஞர் பெயரை வைப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

எனவே, புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலே தொடர்ந்து செயல்பட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,”காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கலைஞர் உணவகம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது. திமுகவினர் கருணாநிதி பெயர், ஸ்டாலின் பெயர் என யார் பெயரில் வேண்டுமென்றாலும் உணவகங்களைத் திறந்துகொள்ளட்டும். ஆனால் இதனைத் திறந்து அம்மா உணவகங்களை மூடினால் அதிமுக சும்மா இருக்காது. தமிழ்நாட்டில் திமுகவினர் மக்களுக்குப் பயன்படும் வகையில் உருப்படியான திட்டங்களைக் கொண்டுவந்தால் அதனை நாங்களே பாராட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ்,”கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம்;வாழ்த்துகிறோம். ஆனால், அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்களை செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 26 நவ 2021