மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

தமிழக இளைஞர்கள் திறமைசாலிகள்: கனெக்ட் மாநாட்டில் முதல்வர்!

தமிழக இளைஞர்கள் திறமைசாலிகள்: கனெக்ட் மாநாட்டில் முதல்வர்!

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கு ’CII CONNECT 2021’ இன்று (நவம்பர் 26) சென்னையில் நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மனோ தங்கராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, சென்னை கணிதவியல் கழகம் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ இன்றைய உலகத்தையே ஆட்சி செய்வது 'இ' என்ற ஓரெழுத்து மந்திரம் தான். இண்டர்நெட் இல்லாமல் யாரும் வாழ முடியாது, இருக்க முடியாது என்ற ஒரு சூழ்நிலை உள்ளது. தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வந்துவிட்டோம். அனைத்து துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தே இயங்க வேண்டும் என்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே இதை ஒரு துறையின் மாநாடாக நாம் பார்க்க முடியாது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, எனக்கு 1996ஆம் ஆண்டுதான் நினைவுக்கு வருகிறது. 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சியைச் செய்தவர்தான் அன்றைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடி வந்து தேர்வுசெய்யக்கூடிய முதல் நகரமாகச் சென்னையை மாற்றிக் காட்டிய ஆட்சி திமுக ஆட்சி.

தகவல் தொழில்நுட்பத்துக்காக, தனித் துறையை 1998-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அரசுத் துறையைக் கணினிமயமாக்கினார். பள்ளிக்கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார்.

இந்தச் சாதனைகளுக்கான சாட்சிதான் இன்று தரமணியில் கம்பீரமாகக் காட்சியளிக்கக்கூடிய டைடல் பார்க் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. 24 ஆண்டுகளுக்கு முன்னால் 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த டைடல் பார்க் கட்டப்பட்டது. சென்னை தரமணி முதல் மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய சாலையை ஐ.டி. சூப்பர் ஹைவே சாலையாக மாற்றி அமைத்த ஆட்சியும் திமுக ஆட்சிதான்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு மாநிலத்துக்கு மிகப்பெரிய முன்னேற்றங்களையும் முதலீடுகளையும் கொண்டு வருவதில் தகவல் தொழில்நுட்பத் துறைதான் முன்னணி வகிக்கிறது. தேவையையும் - தொலைநோக்குப் பார்வையையும் - அதன் மூலமாக வளர்ச்சியையும் - வேலை வாய்ப்பையும் அதிகரிப்பதாக இந்த மாநாடு அமைய வேண்டும்.

இந்தத் துறையில் புதிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்படக்கூடிய தொழில் நுட்பங்கள் புதியதாக மாற வேண்டும். புதிய திறன்கள் உருவாக வேண்டும். அந்த அடிப்படையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகி, தனிமனிதர்களையும் நிறுவனங்களையும், அதன் மூலமாக மாநிலத்தையும், நாட்டையும் பரவலாக வளர்ப்பதற்கு அது அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மனித வளத்தை, அறிவுச் சக்தியாகப் பயன்படுத்திக் கொள்ளத்தக்கவகையில் உங்களது நிறுவனங்களை வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்பதோடு நிற்காமல் - அறிவாளிகளும் திறமைசாலிகளுமே இதற்குத் தேவை. அத்தகைய திறமைசாலியான, கூர்மையான அறிவுத்திறன் படைத்த இளைஞர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கூடுதலான திறன் பயிற்சிகள் கொடுத்து அவர்களை உங்கள் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. உலக அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது.

நாட்டிலேயே மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவின் மொத்த மின்னணுவியல் உற்பத்தியில் 16 விழுக்காட்டைச் சார்ந்தது தமிழ்நாடு. கணினி, மின்னணுவியல் மற்றும் ஆப்டிகல் தயாரிப்புகள் தயாரிப்பில் இந்தியாவில் 2-ஆவது இடத்தில் இருக்கிறோம். மின்னணுவியல் ஏற்றுமதியில் இந்தியாவில் 3-ஆவது இடத்தில் இருக்கிறோம். உற்பத்தித் திறனின் வலுவான முதுகெலும்பில் தமிழ்நாடு இந்தியாவின் மின்னணு உற்பத்திச் சேவை மையமாகவும் உருவெடுத்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறது. ஐடி தொழில்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் தமிழ்நாடு அரசு வழங்கும்” என்றார்.

“தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் அகன்ற அலைவரிசை இணைய வசதியை ஏற்படுத்துவதற்காக, இந்திய அரசின் பாரத்நெட் திட்டம், மாநிலத்தின் 12,525 கிராம ஊராட்சிகளையும் குறைந்தபட்சம் 1 GBPS அதிவேக இணைப்புடன் இணைக்கச் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தரமான டிஜிட்டல் சேவைகள், இணையவழிக் கல்வி, டெலிமெடிசின் மற்றும் டிரிபிள்-ப்ளே சேவைகள் கிடைக்கும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிவேக இணைய சேவைகள் கிடைக்கும். இதன் மூலமாக, கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும். எங்களின் புதிய கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகள் தமிழ்நாட்டைச் சர்வதேசத் தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றும். மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குத் தடையாக உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் தொழில்துறையுடன் இணைந்து செயல்படுவோம். தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது நமது லட்சியமான 1 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய உதவும் என்பதையும், இந்த முன்னேற்றத்தில் கனெக்ட் மிகவும் வலுவான பங்கை வகிக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 26 நவ 2021