மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

'போராட்டம் தொடரும்’: 2ஆவது நாளாக காங் எம்.பி. தர்ணா!

'போராட்டம் தொடரும்’: 2ஆவது நாளாக காங் எம்.பி. தர்ணா!

கரூர் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்கள் நடத்தப்படுவதில்லை என குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மத்திய சமூக நீதித் துறையின் மூலம் மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் ADIP என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களைத் தயாரித்து வழங்குகிறது. எனவே மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்களை நடத்தும்போது அலிம்கோ நிறுவனத்தை இணைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தரவேண்டும் எனக் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி நேற்று முதல் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் மாவட்ட ஆட்சியர் சமாதானமாகப் பேசியும், ஜோதிமணி மத்திய அரசின் உதவிக்கான முகாம்களை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று இரவு ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே படுத்து உறங்கி, இன்று காலை முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நீதிக்கும் நியாயத்திற்கும் நாங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் என்று குறிப்பிட்டு போராட்டம் தொடரும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜோதி மணி.

இதனிடையே கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் மீது குற்றம்சாட்டி ஜோதிமணி தலைமை செயலாளர் இறையன்புவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தற்போதைய கரூர்‌ ஆட்சியர் மேசையிலிருந்து குறைந்தபட்சம்‌ 1% – 2% வரை கட்டாய வசூல்‌ முடிந்த பிறகு தான்‌ கோப்புகள்‌ நகரும்‌ என்று மக்கள்‌ மத்தியில்‌ பரவலான அபிப்ராயம்‌ உள்ளது. அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட்டால்‌ உண்மை வெளிப்படும்‌. ஆனால்‌ நானோ அரசியலில்‌ நேர்மையை மட்டுமே நம்புகிறேன்‌.

கடந்த ஆட்சிக்‌ காலத்தில்‌ கரூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியில்‌ (2019-2020) இருந்து விராலி மலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட கொரொனா தடுப்பு நிதியில்‌ 35 லட்ச ரூபாய்‌ ஊழல்‌ நடந்ததைக் கண்டறிந்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்‌ நிதியைத் திரும்பப்பெற்று, அதே தொகுதியில்‌ பள்ளிகளில்‌ வகுப்பறை கட்டுவதற்கு ஒதுக்கியுள்ளேன்‌. ஆகவே எனது பணிகளில்‌ ஊழல்‌ செய்வது சாத்தியமில்லை.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை எனது முன்னெடுப்பில்‌ செயல்படுத்தினால்‌ வழக்கம்போல ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன்‌ என்பதால்‌ நாடாளுமன்ற உறுப்பினரான எனது முயற்சியில்‌ கொண்டுவரப்படும்‌ ஒன்றிய அரசின்‌ திட்டங்களைச் செயல்படுத்த கரூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ மறுக்கிறாரா என்பது போன்ற கேள்விகள்‌ எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கடந்த காலகட்டத்தில்‌ மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த நாங்கள் போராட்டத்தை மேற்கொண்ட போது, இன்றைய முதலமைச்சர்‌. அன்றைய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌, எனக்குத் தந்த தார்மீக ஆதரவை இந்த நேரத்தில்‌ நான்‌ நன்றியோடு நினைவுகூர விரும்புகிறேன்‌.

அப்படிப்பட்ட முதலமைச்சரின்‌ தலைமையிலான அரசில்‌, கரூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ எப்படி இப்படியொரு முறைகேடான உத்தரவைப்‌ பிறப்பிக்க முடியும்‌? அதுவும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலன்‌ தொடர்பான செயல்பாட்டில்‌ மாவட்ட ஆட்சியருக்கு இப்படி ஒரு முக்கியமான கொள்கை முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம்‌ எங்கிருந்து வந்தது. தமிழக அரசின்‌ அனுமதி இன்றி, பொறுப்பற்ற முறையில்‌ மக்கள்‌ நலன்களுக்கு விரோதமாக, ஒரு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ இப்படி ஒரு கொள்கை முடிவை எடுத்திருப்பது சட்டவிரோதமானது.

ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின்‌ மலிவான, பொறுப்பற்ற, உள்நோக்கமுள்ள சுயநல செயல்பாடுகளால்‌, மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள்‌ நலன்‌ பாதிக்கப்படக்கூடாது. ஆகவே, உடனடியாக கரூர்‌ மாவட்ட ஆட்சியரின்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு விரோதமான, இதயமற்ற கொள்கை முடிவைத் திரும்பப்பெற்று, மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்காக, எனது தீவிரமான முயற்சியில்‌ கொண்டுவரப்பட்ட ஒன்றிய சமூகநீதி அமைச்சகத்தின்‌ அலிம்கோ நிறுவனத்தின்‌, மாற்றுத்திறனாளிகள்‌ முகாமை கரூர்‌ மாவட்டத்தில்‌ உடனடியாக நடத்தவேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

இது மாற்றுத்திறனாளி மக்களின்‌ பிரச்சினை மட்டுமோ, ஒரு தனிப்பட்ட கரூர்‌ நாடாளுமன்ற உறுப்பினரின்‌ உரிமைப்‌ பிரச்சினை மட்டுமோ அல்ல. மத்திய, மாநில அரசுகளின்‌ நிர்வாகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ தலைமையிலான மாவட்ட நிர்வாகத்தின்‌ எல்லைகள்‌, செயல்பாடுகள்‌, மக்கள்‌ பிரதிநிதிகளின்‌ பொறுப்புகள்‌ என்று அனைத்தையுமே கேள்விக்கு உள்ளாக்கியுள்ள, அரசியல்‌ சாசனம்‌ வரையறுத்துள்ள விதிகளை கேலிக்கூத்தாக்கியுள்ள ஒரு மாபெரும்‌ தவறு” என்று குறிப்பிட்டுள்ளார் ஜோதிமணி.

அதேசமயத்தில் ஆட்சியர் கூறுகையில், “மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 4 முகாம்கள் நடைபெற்றுள்ளன.

ADIP திட்டத்தின் படி, முட்டுக்காட்டில் உள்ள இந்திய அரசின் நிறுவனத்திலிருந்து, நேரடியாக இங்கு வந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க அளவெடுத்தனர். இதுவரை 1002 பேர் முகாம்களில் கலந்துகொண்டு மனு கொடுத்துள்ளனர். வரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று வாக்கெடுப்பு எடுக்க இருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளுக்காக முகாம்களில் கலந்து கொள்ள எம்.பி.ஜோதிமணிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் கலந்துகொள்வார் என்று நம்புகிறோம்” என்று கூறினார். அதோடு தனது ட்விட்டர் பக்கத்தில் வாய்மையே வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆட்சியர் பிரபுசங்கர்.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வெள்ளி 26 நவ 2021