மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

‘விட்றாதீங்கப்பா’ என்ற கதறல் மனதிற்குள் ஒலிக்கிறது!

‘விட்றாதீங்கப்பா’ என்ற கதறல் மனதிற்குள் ஒலிக்கிறது!

ஒரு முதல்வராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று முதல்வர் பெண் குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. சமீப காலமாக தமிழ்நாட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், அதனால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் தற்கொலை செய்து அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் பாலியல் தொல்லையால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,” அனைவர்க்கும் எனது அன்பான வணக்கம். சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது.

அறத்தையும் பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில்,கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில்,அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்த காலக்கட்டத்தில், இப்படிப்பட்ட கேவலமான, அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இவற்றைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. விட்றாதீங்கப்பா என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது. விட்டு விடமாட்டோம்” என்று உறுதி அளித்தார்.

”பள்ளிகளில்,கல்லூரிகளில்,பணிபுரியும் இடங்களில்,பொது வெளிகளில் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதில் சில சம்பவங்கள்தான் வெளியில் வருகிறது. மற்றவை அப்படியே மறைக்கப்படுகிறது.

அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் கருணாநிதி ஒரு படத்தில், மனச்சாட்சி உறங்கும்

சமயம் பார்த்துத்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று எழுதினார். அப்படி மனச்சாட்சியற்ற மனிதர்களால் பெண் பிள்ளைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பற்றிப் பேசுவதில் எந்தப் பொருளும் இல்லை. சக உயிராக பெண்ணைப் பார்க்கும் எண்ணம் தோன்றாத வரை இதனைத் தடுக்க முடியாது. உடல் ரீதியாக, ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாகச் செய்யப்படும் வெளிப்படையான பாலியல் சீண்டல்களுக்கு எதிராக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. அந்தச் சட்டங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இத்தகைய நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நான் இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன்.

இப்படியான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாகப் புகார் தருவதற்கு முன் வர வேண்டும்.

பள்ளியின் ஆசிரியர்களிடம், தலைமை ஆசிரியரிடம், பெற்றோர்களிடம், சக அதிகாரிகளிடம், நிர்வாகத்திடம் புகார்களைத் தர வேண்டும். அந்தப் புகார் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களும் தயங்கக் கூடாது. புகாரை வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப் போகும் என்று பள்ளி நிர்வாகமும் தனது மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தவறாகப் பேசுவார்கள் என்று பெற்றோரும் நினைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாக ஆகிவிடும்.

பாலியல் வன்முறையினால் அந்தப் பெண்ணின் அனைத்துச் செயல்பாடுகளுமே தடைபடுகிறது. அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. இதை மற்ற அனைத்துப் பிரச்னைகளையும் விட மிக முக்கியமான பிரச்சினையாக தமிழ்நாடு அரசு கருதுகிறது” என்று கூறியவர் பாலியல் வன்முறையை தடுக்க அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,”பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு காட்டும் அக்கறைப் போன்று, பள்ளியிலும், வீட்டிலும் காட்ட வேண்டும். அன்புக் குழந்தைகளே… உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு முதலமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாட்டிவிட்டு மரணம் அடைகிறார் என்று பொருள்.

வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று

ஒரு தந்தையாக - உங்கள் சகோதரனாக- உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நான் இருக்கிறேன். அரசாங்கம் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வெள்ளி 26 நவ 2021