மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாமக ஆட்சிக்கு வரும் அளவுக்கு நிர்வாகிகள் வேலைசெய்யவேண்டும்; அப்படி செய்யாவிட்டால் மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு மாவட்டச்செயலாளர் பதவியைக் கொடுத்துவிடுவேன் என அதிரவைத்திருக்கிறார், மருத்துவர் இராமதாஸ்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு அதிகமான இடங்களில் வெற்றிபெற முடியவில்லை. அடுத்து நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்தாக வேண்டும் என்கிற முனைப்பில் பாமக நிறுவனர் இராமதாஸ் நேரடியாகக் களம் இறங்கிவிட்டார். மாவட்டம் மாவட்டமாகப் போய் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்திவருகிறார்.

கடந்த வாரம் திண்டிவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது, சமூக ஊடகங்களில் பரவி பரவலான கவனத்தை ஈர்த்தது. ஆதரவாகவும் கிண்டல் கேலியாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட அமைப்புகளின் கூட்டம், கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று (நவம்பர் 25) நடைபெற்றது.

கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, மாவட்டச் செயலாளர்கள் சண்.முத்துக்கிருஷ்ணன், செல்வ.மகேஷ், ரவிச்சந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய இராமதாஸ், பாமகவுக்கு கடலூர் மாவட்டம் ஒரு காலத்தில் பெருமைக்குரிய பகுதி எனக் குறிப்பிட்டுவிட்டு, உடனே விமர்சனத்தையும் முன்வைத்தார். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இது பெருமைக்குரிய மாவட்டமாக இல்லை என்றார்.

“இப்போது நமக்கு ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால் ஏழு பேராவது வெற்றி பெற்றிருக்கவேண்டும். கடலூரில் போட்டியிட்ட இரண்டு பேரும் ஜெயித்திருக்கவேண்டும். அவர்களைத் தோற்கடித்தவர்கள் நம்முடைய கட்சிக்காரர்கள்தான். பொறுப்பில் இருந்தவர்கள்.. இருக்கிறவர்களும்தான். இப்படி நடக்கலாமா, இது பெருமைக்குரிய மாவட்டமா?” என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

திமுக எம்பியின் முந்திரி ஆலையில் மர்மமாக இறந்துபோன ஊழியர் கோவிந்தராசுவின் பிரச்னையையும் இராமதாஸ் சுட்டிக்காட்டிப் பேசினார்.

”இந்தப் பிரச்னையில் யார் முன்னால் நின்றது.. போராடியது யார்? ஆனால் யாருக்கு ஓட்டு போட்டு, நீங்கள் ஜெயிக்க வைத்திருக்கிறீர்கள். இந்த மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நாம் தனியாக நின்றோம். அப்போது ஒரு இடத்தில்கூட நாம் வெற்றிபெறவில்லை. அப்போது எங்கே போனீர்கள்.. எங்கே போனது உங்கள் சமுதாய உணர்வு? உள்ளாட்சித் தேர்தலில் எல்லா இடங்களிலும் நாம் போட்டியிடவில்லை. ஏன்.. நாம் விலைபோய்விட்டோமா.. விட்டுக்கொடுத்துவிட்டோமா இல்லை லோக்கல் அண்டர்ஸ்டேன்டிங்கா?” என்றவரின் பேச்சு,

அவருக்கே உரிய பாணியில் தொனி எகிறியது.

” தேர்தலில் நிறுத்த ஆள் பஞ்சமா என்ன... முடியவில்லை என்றால் கட்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய பதவிகள் எதற்கு? தமிழ்நாட்டை நாம் ஆளவேண்டும். அந்த எண்ணம் நிறைவேற, அன்புமணி முதலமைச்சராக வரவேண்டும் என்றால் நீங்கள் வேலைசெய்தாக வேண்டும். அப்படி செய்தால் பதவிகள் இருக்கட்டும். இல்லாவிட்டால் மாடுமேய்க்கிற சிறு பையன்களிடம் மாவட்டச்செயலாளர் பதவியைக் கொடுத்து விடுவேன்.” என அரங்கத்தை சூடாக்கினார், இராமதாஸ்.

திண்டிவனம் கூட்டத்தைப் போலவே, இங்கும், திண்ணைப் பிரச்சாரம் செய்யவேண்டும்; சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யவேண்டும்; 60 தொகுதிகளைப் பிடிக்கவேண்டும் என்றவர்,

பத்தரை சதவீத ஒதுக்கீட்டில் திமுக அரசாங்கத்தின் நடவடிக்கையைப் பற்றி திருப்தி தெரிவித்தார்.

- பாலசிங்கம்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 26 நவ 2021