மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

கமலுக்கு பாதிப்பு குறைவு - ஏன்?: அமைச்சர் விளக்கம்!

கமலுக்கு பாதிப்பு குறைவு - ஏன்?: அமைச்சர் விளக்கம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரண்டு தவணை தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டதால்தான், அவருக்குப் பெரியளவில் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேற்று (நவம்பர் 25) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இன்று நடைபெற்ற 12ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 52 ஆயிரத்து 832 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 4 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல் தவணையும், 7 லட்சத்து 48 ஆயிரத்து 860 பேர் இரண்டாவது தவணையும் செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் பணி மக்கள் இயக்கமாக நடைபெற்று வருகிறது. மழைக்கு இடையிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 77.02 சதவிகிதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 41.60 சதவிகிதம் பேரும் செலுத்தியுள்ளனர். சமீப காலமாக இரண்டாவது தவணை செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, 78 லட்சத்து 27ஆயிரத்து 466 பேர் இரண்டாவது தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இழப்பு அதிகமாக உள்ளது. தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட நாடுகளில் இழப்பு குறைவாக உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குறைவான அளவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செவிலியர்களுக்கு பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், 12ஆவது தடுப்பூசி முகாமுக்கு பிறகு தினந்தோறும் காலை 9 மணி முதல் 5 மணி வரையாக தடுப்பூசி செலுத்தும் நேரத்தை மாற்ற உள்ளோம். மேலும் வாரத்தில் ஒருநாள் மட்டும் தடுப்பூசி முகாம் நடத்த கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து முதல்வரிடம் அனுமதி பெற்று விரைவில் தெரிவிக்கப்படும். இல்லம் தேடி தடுப்பூசி திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டை பார்த்துதான் ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதனால் மக்கள் தயங்காமல் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இரண்டு தவணை தடுப்பூசியைச் செலுத்தி கொண்டதால்தான் தொற்று வந்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இது மக்களுக்கு மிகப்பெரிய உதாரணம்.தடுப்பூசி போட்டால் தொற்று வராது என்று சொல்லவில்லை, பாதிப்பு குறையும்.

பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற பொது சுகாதாரத் துறை அறிவிப்பாலேயே கடந்த இரண்டு முகாம்களில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 920 நபர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 4,527 நபர்களுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. அதில் டெங்கு பாதிப்பால் 573 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை ஆறு பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 26 நவ 2021