மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

அரசியலமைப்புச் சட்ட நாள்: முதல்வர் சபதம்!

அரசியலமைப்புச் சட்ட நாள்: முதல்வர் சபதம்!

இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்கிட சபதம் எடுப்போம் என இந்திய அரசியலமைப்புச் சட்ட நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இந்திய அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள், 1946 டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 29 அன்று டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 60 நாடுகளுக்கும் மேற்பட்ட அரசியல் சாசன சட்டத்தில் உள்ள பிரிவுகளை கொண்டு இந்தியா அரசியல் சாசனம் உருவாக்கும் பணி நடைபெற்றது. இந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க, கிட்டதட்ட இரண்டு வருடங்கள், 11 மாதங்கள், 18 நாட்கள் ஆனது. 1949 நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு சட்டம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாளே ஒவ்வோர் ஆண்டும் இந்திய சட்ட தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட நாளை (நவம்பர் 26) முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1949ஆம் ஆண்டு இதே நாளில் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நம் உரிமைகளையும், கடமைகளையும் உள்ளடக்கியிருப்பதோடு மட்டுமின்றி, நம் ஜனநாயகத்தின் அனைத்துக் கட்டமைப்புகளையும் கட்டிக் காத்து வருகிறது.

இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தில் சமூகநீதி, கருத்து சுதந்திரம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் பக்கத்துக்குப் பக்கம் மிளிருகிறது. உரிமைகள் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் வந்து கொண்டிருக்கிறது.

எத்தனையோ அரசியலமைப்புச் சட்டங்கள் உலகளவில் இருந்தாலும் - எழுத்துபூர்வமான நம் சட்டம் - உலகப் புகழ் பெற்றது. அப்படியொரு அரசியலமைப்புச் சட்டத்தைத் தந்த அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவர்கள்.

இந்தியக் குடிமக்கள் அனைவரும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தை உருவாக்கப் பாடுபட்டதையும் - தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து நிறைவேற்றித் தந்துள்ள ஒன்றிய - மாநில அரசு உறவுகள், அதிகாரங்கள், நீதித்துறை சுதந்திரம், சட்டமன்ற, நாடாளுமன்றங்களின் இறையாண்மை, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவரின் செயல்பாடுகள் என்பதோடு – அனைத்திற்கும் முத்தாய்ப்பான “அடிப்படை உரிமைகள்” (Fundamental Rights), “அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்” (Directive of State Policy), “அடிப்படைக் கடமைகள்” (Constitutitional Duties) அனைத்தும் நமக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தந்தவை.

இன்றளவும் இந்தியாவைக் கட்டி ஆளும் இந்த அரசியலமைப்புச் சட்டம்தான், மாநிலத்தில் அன்னைத் தமிழுக்கு ஆட்சி மொழி உரிமையும் அளித்திருக்கிறது. எமக்கு அளித்துள்ள எண்ணிலடங்கா உரிமைகளை நினைத்துப் பார்த்து- எத்தகையை சூழலிலும் அரசியலமைப்புச் சட்டம் விரும்பிய ஜனநாயகத்தைக் காப்பாற்றிட நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய தருணமே இந்த அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளாகும்.

சிறப்பு வாய்ந்த இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் திறவுகோல்தான் முகவுரை என்றழைக்கப்படும் “Preamble” என்பதை அரசியல் சட்ட நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று என்று உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட இந்த முகவுரையை குடிமக்கள் மட்டுமல்ல - ஆட்சியில் இருப்போரும் புடம் போட்ட தங்கம் போல் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருவூலமாகப் பார்க்க வேண்டும்.

அந்த முகவுரை அடங்கிய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் நவம்பர் 26 ஆம் தேதி. நம் அரசியல் சட்டம் கண்ட இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்கிடச் சபதம் எடுப்போம்.

இது நம் அரசியலமைப்புச் சட்டம். அதனை வெளிப்படுத்தவே - அரசியல் சட்டத்தின் முதல் வரியே “We the people of India” என்ற முழக்கத்தை முன் வைக்கிறது. மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தின மீண்டும் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வெள்ளி 26 நவ 2021