மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

ஓபிஎஸ்ஸுக்கு ஐடி நோட்டீஸ்: தடைவிதிக்க மறுப்பு!

ஓபிஎஸ்ஸுக்கு ஐடி நோட்டீஸ்: தடைவிதிக்க மறுப்பு!

முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் முக்கிய டைரி ஒன்று சிக்கியது. அதில் பணப் பரிமாற்றம் தொடர்பான விவரம் இருந்ததாகவும், அதோடு, ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த ஆவணத்தின் அடிப்படையில் வருமானவரித் துறை சார்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது.

அதில், 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கு 82.12 கோடி ரூபாயும் வரியாகச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று (நவம்பர் 25) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வருமானவரி சட்டத் திருத்தத்திற்கு முரணாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதற்கு வருமானவரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாசன், 2017-18ஆம் ஆண்டுக்கான வரியைச் செலுத்த வேண்டும் என்பதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் பொருந்தாது. இந்தச் சட்டம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வந்தது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இவ்வழக்கு தொடர்பாக வருமானவரித் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வருமானவரித் துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கூறி வழக்கு விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 26 நவ 2021