மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

யார் வாரிசு அரசியல் செய்வது?: ஆர்.எஸ்.பாரதி தாக்கு!

யார் வாரிசு அரசியல் செய்வது?: ஆர்.எஸ்.பாரதி தாக்கு!

திருப்பூரில் நேற்று முன்தினம் (நவம்பர் 24), பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, திமுகவும் காங்கிரஸும் வாரிசு அரசியல் செய்வதாகக் கடுமையாக விமர்சித்த நட்டா, “குடும்ப அரசியலால் ஜனநாயகத்துக்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஊழலும் திமுகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்” என்று கடுமையாகத் தாக்கி பேசினார்.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நட்டாவின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜக தேசிய தலைவர் நட்டா ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்று ‘திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது’ என்று குற்றம்சாட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், “தனது கூட்டணிக் கட்சியிலிருந்தே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்ப்பதைத் திசை திருப்பி - எங்கே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அந்த கூட்டணியும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் நேர்மையாகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே நடைபெறும் திமுக ஆட்சியைப் பார்த்துக் குறை கூறுவது வியப்பளிக்கிறது.

பல வாரிசுகளை உருவாக்கி - அவர்களைச் சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி - நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பாஜக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் ஆட்சியைப் பற்றி "வாரிசு அரசியல்" என்று கூறுவது வெட்கக்கேடானது. பாவம்- அவருக்கு எதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்று புரியவில்லை. எந்த வழியில் பொய் பிரச்சாரம் செய்தாலும் - தமிழ்நாடு மக்கள் திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் இப்படி அபாண்டமாகக் குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

பத்தாண்டுக் காலம் அரசு நிர்வாகத்தை பாழ்படுத்தி- ஊழல் செய்த அதிமுகவை அருகில் வைத்துக் கொண்டு "நிர்வாகம்" குறித்து திமுகவிற்குப் பாடம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் ஜே.பி. நட்டா என்று குறிப்பிட்டுள்ள ஆர். எஸ்.பாரதி, “திமுக ஆட்சி இருந்தபோதெல்லாம் தமிழ்நாடு எத்தகையை முன்னேற்றம் கண்டது என்பதன் அடையாளம்தான் அத்தனை சதிகளையும் முறியடித்து தமிழ்நாடு மக்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அளித்த மாபெரும் வெற்றி. அதை நட்டா உணர வேண்டும்.

மழை வெள்ளச் சேதங்களைத் தினமும் பார்வையிட்டு - மக்களுக்கு நிவாரணம் வழங்கி - பணிகளை முடுக்கி விட்டது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டுமே. அப்படியொரு முதலமைச்சர் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே இல்லை என்பதை ஏனோ நட்டா வசதியாக மறந்து விட்டது வேதனையளிக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நட்டா பேசுவது - தன் கட்சி முதுகில் இருக்கும் அழுக்கை மறைக்கவா - அல்லது விவசாயிகளின் போராட்டத்திற்குத் தொடக்கம் தொட்டே திமுகவின் ஆதரவும், போராட்டங்களும், ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களும் காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆதங்கமா என்று புரியவில்லை. ஆகவே நட்டா அரசியல் விழாக்களுக்கு வரும்போது "பொய் மூட்டைகளை" அவிழ்த்துக் கொட்டுவதைக் கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 26 நவ 2021