கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன…? – காங். எம்.பி. தர்ணா!

politics

கடந்த அதிமுக ஆட்சியில் கரூர் எம்.பி. ஜோதிமணி என்றாலே அரசாங்கத்தோடு முட்டல் மோதல்தான் என இருந்தது. இப்போது காங்கிரசின் தோழமைக் கட்சி ஆட்சியிலும் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தியது, மாவட்டத்தைத் தாண்டி கவனத்தை ஈர்த்தது.

இன்று மதியம் 12 மணிவாக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், திடீரென தரையில் அமர்ந்தார். தகவலறிந்து வந்த ஊடகத்தினரிடம், ஆட்சியர் பிரபுசங்கர் மீது குற்றம்சாட்டிப் பேசினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்காக மத்திய அரசின் சமூகநீதி – அதிகாரமளித்தல் துறையின் மூலம் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியின் மூலமும் பரிந்துரை மூலமும், பெரிய அளவில் முகாம் நடத்தி பயனாளிகள் கண்டறியப்படுவது உண்டு.

அதன்படி, கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜோதிமணி ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு இந்தத் தேவை இருப்பதை அறிந்திருக்கிறார். கரூர் மக்களவைத் தொகுதியில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜோதிமணி தெரிவித்து, முகாம்கள் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கானவர்களுக்கு பயன் கிடைக்க செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தன்னை அலட்சியம் செய்வதாகவும் மைய அரசின் இந்த உதவியை மக்களுக்குச் செல்லவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார், ஜோதிமணி.

இந்த அளவுக்கு பிரச்னைக்குக் காரணம், இது தொடர்பான தகவல்பரிமாற்றத்தில் ஜோதிமணிக்கு ஆட்சியர் அனுப்பிய விளக்கக் கடித வாசகம்தான் என்கிறார்கள், மாவட்டத்தில்.

மாநில அரசாங்கத்தின் மூலம் இப்படியான முகாம்கள் நடத்தப்படுவதாகவும் தேவைப்பட்டால் ஜோதிமணியின் யோசனைப்படி முகாம் நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதை, ஜோதிமணி பிரச்னையாக எடுத்துக்கொண்டுள்ளார்.

”நான் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6800 கிராமங்களில் 6300 கிராமங்களுக்கு போய் மக்களை சந்தித்திருக்கிறேன். உதவி கேட்டு மனு கொடுத்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை கண்டு அதிர்ந்துபோனேன். தேவைஇருக்கிறது என்று தெரியாமலா இந்த திட்டத்தை கேட்டு வாங்கியிருப்பேன்?” என்பது அவரின் பதில் வாதம்.

”ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த மறுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா?எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இப்படியொரு பதில் கடிதம் கொடுக்கிறார்? ஒன்றிய அரசின் திட்டமானாலும்,தமிழக அரசின் திட்டமானாலும் அடிப்படையில் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படுவதுதான். கரூருக்கு ஒன்றிய அரசின் திட்டம் இப்பொழுது தேவையில்லை என்று எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முடிவுக்கு வந்தார்?

ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை?” என வரிசையாக கேள்விகளை அடுக்குகிறார், ஜோதிமணி.

ஆர்ப்பாட்டம் செய்த ஜோதிமணியிடம், அவருக்கு முன்பாக தரையில் அமர்ந்து சமாதானப்படுத்த முயன்றார், ஆட்சியர் பிரபுசங்கர். ஆனால் ஜோதிமணியோ, மைய அரசின் உதவிக்கான முகாம்களை நடத்தும் தேதியை உடனே சொன்னால்தான் ஆர்ப்பாட்டத்தை முடிப்பேன் என உறுதியாகச் சொல்லிவிட்டார்.

அத்துடன், இதில் முறைகேடும் கமிஷனும் பெறுவதற்காகவே ஊழல்கறை படிந்த ஆட்சியர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்று அவர் முன்பாகவே ஜோதிமணி குற்றம்சாட்டியது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இதில் ஜோதிமணி குறிப்பிட்ட இன்னொரு சங்கதிதான், உச்சமாக அமைந்தது.

இதே திட்டத்தின்படி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி முன்வைப்பின்படி அந்த மாவட்ட நிர்வாகம் முகாம்களை நடத்துகிறது; கரூர் ஆட்சியர் மட்டும் ஏன் நடத்தவில்லை எனும் ஜோதிமணியின் கேள்விக்குப் பின்னால் இருப்பதுதான் மர்மமாக இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையும் இந்திய செயற்கை அவயவங்கள் உற்பத்திக் கழகமும் இணைந்து உதவிக் கருவிகள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாமை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி, தன் மக்களவை உறுப்பினர் தொகுதிப் பணியை ஆட்சியர் அலுவலகத்திலேயே செய்வதாக அறிவித்து, இன்று இரவு 7 மணிவரை அதைத் தொடர்ந்துகொண்டிருந்தார். போராட்டத்துடன் மாவட்ட ஆட்சியரைப் பற்றி 4 பக்கக் கடிதம் ஒன்றையும் தலைமைச்செயலாளர் இறையன்புவுக்கு அனுப்பிவைத்திருக்கிறார், ஜோதிமணி!

**-பாலசிங்கம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *