மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

தென்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தென்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்க கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது. சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தாலும் கனமழையாகவே பெய்தது. ஆனால், தூத்துக்குடி,நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் காலையில் ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்து வரும் தொடர் அதீத கனமழை காரணமாக மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் சாலைகளில் ஓடுகிறது. மழை இடைவிடாது பெய்து வருவதால் மதியம் 12:30 மணிக்குப் பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறையை அறிவித்தார். திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காலை முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 20 செ.மீ மழையும், தூத்துக்குடியில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் திருச்செந்தூர் நகர் முழுவதும் தீவுபோல் காட்சியளிக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உள், வெளிப் பிரகாரங்களிலும் மழைவெள்ளம் புகுந்தது. கோயில் வளாகம் பார்ப்பதற்கு ஆறு போன்று காட்சி அளிக்கிறது. இதனால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக, ரயில் நிலையத்தின் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. அதுபோன்று விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து பகல் 1.50 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரையிறங்க முடியாததால் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அந்த விமானத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பயணம் செய்தார்.

மேலும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள்அனைவரும் தயார் நிலையில் இருக்கின்றனர். சில இடங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது, அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-வினிதா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வியாழன் 25 நவ 2021