மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

சன்னும் சன் இன் லாவும்தான் தமிழ்நாட்டு ஆட்சி - நட்டா கூட்டத்தில் தோட்டா!

சன்னும் சன் இன் லாவும்தான் தமிழ்நாட்டு ஆட்சி -  நட்டா கூட்டத்தில் தோட்டா!

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என்று பாஜக தலைவர்கள் கூறுவது, வெறும் வசனம் மட்டும் இல்லை என்பதைக் காட்டியிருக்கிறது, அந்தக் கட்சியின் திருப்பூர் மாநில செயற்குழுக் கூட்டம்.

பாஜகவின் அனைத்திந்தியத் தலைவர் ஜே.பி. நட்டா, நேற்றைய மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றது காவிக் கட்சியினரிடம் உற்சாகத்தை உசுப்பிவிட்டிருக்கிறது. திருப்பூர் வித்யாலயம் அருகில் கட்டப்பட்டுள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தை அவர் திறந்துவைத்தார்.

அங்கிருந்தபடியே ஈரோடு, திருப்பத்தூர், நெல்லை மாவட்டங்களின் கட்சி அலுவலகங்களையும் காணொலி மூலம் திறந்துவைத்தார்.

திருப்பூர் கட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், வாரிசு அரசியல் பற்றி குறிப்பிட்டு திமுக, காங்கிரஸ் கட்சிகளைத் தாக்கினார், நட்டா.

அதற்கு முன்னர் மாநில செயற்குழுக் கூட்டத்திலும் பேசிய முக்கிய தலைவர்கள் வாரிசு அரசியலிலேயே கவனம்செலுத்தியுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் திமுக என்றாலே ஊழல்; ஊழலும் திமுகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று பேசிய நட்டா, அரங்கக் கூட்டத்தில் அதைப் பற்றி அழுத்தமாகப் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் இப்போது ’சன்னும் சன்-இன்-லாவும்தான் (மகனும் மருமகனும்) ஆட்சி என்கிறபடி இருக்கிறது. பல துறைகளில் துணிந்து ஊழல் செய்துவருகிறார்கள். துறைவாரியாக ஒரு பட்டியல் எடுக்கவேண்டும். பல அமைச்சர்களும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களும் தீயாக வேலைசெய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உன்னிப்பாக கவனித்துவர வேண்டும். ஆறு மாதங்கள் முடிந்ததும் துறைவாரியான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லவேண்டும் என்று அவர்கள் பேசினர்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், வரும் தேர்தலில் நமக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; எப்படி மேற்குவங்கத்தில் மமதாவுக்கும் நமக்கும் நேரடிப் போட்டி; மற்ற கட்சிகளெல்லாம் முக்கியம் இல்லை என ஒதுக்கிவிட்டோமோ அதைப்போன்ற நிலைமையை இங்கேயும் உருவாக்கவேண்டும்; நம்முடைய தலைமையில் கூட்டணி அமைத்துதான் வரும் தேர்தலில் போட்டி என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார்.

நட்டா பேசத் தொடங்கியதிலிருந்தே தமிழில் சில வாக்கியங்களைத் திருத்தமாகப் பேசியதும், எல்லாருடைய பெயர்களையும் வரிசையாகச் சொல்லி, முருகன்ஜி அவர்கள், நயினார் நாகேந்திரன்ஜி அவர்கள் என்றது திருப்பூர் குளிரில் ஐஸ் கட்டியை வைத்ததைப்போல இருந்தது.

வீருவேல் வீருவேல் என்று அவர் சொல்ல, வெற்றிவேல் வெற்றிவேல் என நிர்வாகிகள் பதிலுக்குச் சொல்லவும்,

அடுத்து, பாரத் மாத்தாக்கி ஜெ என தமிழ்நாட்டு நிர்வாகிகள் கோஷமிட, பதிலுக்கு நட்டா, பாரதிய ஜனதா கட்சி என்று கோஷம் போட்டார். வாழ்க என தமிழில் கோஷம்போடவும் வைத்து, நிர்வாகிகளுக்கு தமிழ்த் திகைப்பை ஊட்டினார், நட்டா.

- பாலசிங்கம்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வியாழன் 25 நவ 2021