மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

தக்காளியை ரூ.40க்கு விற்க தயார் : ஆனால் ஒரு கண்டிஷன்!

தக்காளியை ரூ.40க்கு விற்க தயார் : ஆனால் ஒரு கண்டிஷன்!

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்க தயாராக இருப்பதாக மொத்த வியாபாரிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. விலை உயர்வை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் நகர்புறத்தில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்று சில மாவட்டங்களில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் உள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. பின்னர் படிப்படியாக மொத்த வியாபாரிகள் கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால், மைதானம் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த மைதானத்தை திறக்கக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இன்று(நவம்பர் 25) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சிவா ஆஜராகி முறையீடு செய்தார்.

”கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும், இந்த மைதானத்தை திறக்கவில்லை. இந்த மைதானம் திறந்தால் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் மார்கெட்டுக்குள் வரும் வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக தக்காளி விலை உயர்வது தடுக்கப்படும்.

இந்த மைதானத்தினுள் தக்காளிகளை ஏற்றிவந்த 11 லாரிகள் நிறுத்தப்பட்டு பின்பு தக்காளி அப்படியே அழுகி போனதாகவும் உயர்நீதிமன்றம் தலையிட்டு அந்த லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய அவர்,

தற்போது இந்த மைதானம் திறந்தால் ஜெய்ப்பூர், உதய்ப்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா வழியாக தக்காளி லாரிகளில் கொண்டு வந்து அந்த மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். இதன் மூலம் தக்காளியின் விலை அதிரடியாக குறையும். 40 முதல் 50 ரூபாய் வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இந்த வழக்கை ஒரு அவசர வழக்காக கருதி நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவையில் உள்ள உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில், ஒருவருக்கு இரண்டு கிலோ தக்காளி மட்டுமே வழங்க வேண்டும். மொத்தமாக தக்காளியை யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திருமண பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே அதிக அளவு தக்காளியை வழங்க வேண்டும் என்று கோவை துணை வேளாண் இயக்குநர் சுந்தர வடிவேலு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 25 நவ 2021