மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

வேதா இல்ல சாவியைப் பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது: தீபா

வேதா இல்ல சாவியைப் பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது:  தீபா

வேதா இல்லத்தைத் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து மேல் நடவடிக்கை எடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம் என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அதிமுக அரசு அரசுடைமையாக்கிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, ஜெ வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஜெ.தீபக் தரப்பில் வழக்கறிஞர் எல்.எஸ்.சுதர்சனம், ஜெ.தீபா தரப்பில் வழக்கறிஞர் கே.வி.சுந்தர் ராஜன், தமிழக அரசு தரப்பில் அப்போது தலைமை வழக்கறிஞராகப் பதவி வகித்த விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் மாதம் முடிவடைந்து தீர்ப்பை ஒத்தி வைத்தார் நீதிபதி சேஷசாயி.

இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவித்து 3 வாரத்திற்குள் வீட்டுச் சாவியைத் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பின் போது, தனிநபரின் சொத்துகளை கையகப்படுத்தி அதை அரசுடைமையாக்கி, நினைவு இல்லமாக மாற்றவோ. அதுதொடர்பாக சட்டம் இயற்றவோ அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார். அதோடு ஒருவருக்கு எதற்கு இரு நினைவிடங்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் தொண்டர்கள், பொதுமக்கள் எண்ணங்களில் வேதா இல்லம் கோயிலாக உள்ளது. அந்த இல்லம் நினைவிடமாக உருவாக்கப்பட வேண்டும் என்கிற வகையில்தான் நினைவு இல்லமாகத் திறக்கப்பட்டது. நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்திருக்கும் நிலையில், மேல் நடவடிக்கை குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவை எடுக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தந்தி டிவிக்கு தீபா அளித்துள்ள பேட்டியில், “இது நியாயமான தீர்ப்பு. சட்டம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்துத்தான் காத்திருந்தோம். தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படி செயல்படுவோம். வேதா இல்லத்தின் சாவியைப் பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நிறையச் சம்பிரதாயங்கள் இருக்கின்றன.

வேதா இல்லத்தைக் கோயிலாகப் பார்க்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது சரியான கருத்து தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதை நானே சொல்லியிருக்கிறேன். அதற்காக சட்டப்படியான வாரிசு தாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதைத் தடுக்க கூடாது. அது தவறு.

இவ்விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்தால் அதனைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். சட்ட விதிகளை முழுமையாகப் படித்து அனைத்து சம்பிரதாயங்களும் முடிக்க வேண்டும். அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார்.

-பிரியா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

வியாழன் 25 நவ 2021