மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

சிலிண்டர் விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

சிலிண்டர் விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

சேலம் தாதகாப்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி கிராமம் பாண்டுரங்கன் தெருவில் வசித்து வந்த கோபி என்பவரின் வீட்டின் நேற்று (நவம்பர் 23) காலை சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் நான்கு வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்பு படையினர், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, “விபத்து குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கும். மேலும் திறந்தவெளியில் சிலிண்டரை வைத்து சமையல் செய்யக் கூடாது என்றும் வீடுகளில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரை பயன்படுத்த வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “சேலத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பத்மநாபன், தேவி, கார்த்திக் ராம், எல்லம்மாள், ராஜலெட்சுமி ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்த செய்திக் கேட்டு வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில், “சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் மரணமடைந்தார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பதிமூன்று பேரும் விரைவில் நலமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்த எதிர்பாராத விபத்தில் இறந்தவர்களுக்கு உரிய நிதியும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணமும், மீண்டும் வீடு கட்ட தேவையான உதவிகளை அரசு வழங்கிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 24 நவ 2021