மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவுக்கு ஒப்புதல்!

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவுக்கு ஒப்புதல்!

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கு இன்று (நவம்பர் 2) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

விவசாயிகளின் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விலை நிர்ணய பாதுகாப்பு ஒப்பந்தம், விவசாய சேவைகள் சட்டம் என 3 சட்டங்களைக் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாமல் பெரு நிறுவனங்களின் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் கடந்த ஓராண்டாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் வீடு திரும்பாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகும் விவசாயிகள் தங்களது போராட்டங்களைத் திரும்பப் பெறவில்லை. நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அது நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் வரும் ஜனவரி 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதோடு, ஏழை மக்களுக்கு மாதம் தோறும் 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் 2022 மார்ச் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாகக் கூறினார்.

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையிலும் வரும் 29 தேதி திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

அதுபோன்று, விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் போராட்டத்தின்போது உயிரிழந்த 750 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே வீடு திரும்புவோம் என்றும் கூறியுள்ளார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 24 நவ 2021