மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

நூல் விலையை குறையுங்கள் : ஈபிஎஸ்

நூல் விலையை குறையுங்கள் : ஈபிஎஸ்

பெட்ரோல் டீசல், சிலிண்டர், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் வரிசையில் நூல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 50 கிலோ கொண்ட நூல்பை 9,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விசைத்தறி உரிமையாளர்கள் நூல்களை வாங்கி உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக ஈரோட்டில், ஜவுளி வியாபாரிகள் நூல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். நாளை மறுநாள் திருப்பூரில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களிலே உள்ளது. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. முக்கியமாக, இந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு அதிரடியாக 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை இந்தியாவிற்கு ஈட்டித் தரும் டாலர் சிட்டி திருப்பூரில், நாட்டின் 60 சதவீத பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நூல் விலை உயர்வினால் ஏற்கெனவே எடுத்த ஆர்டர்களை முழுமையாக செய்து முடிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களை பெற முடியாமலும் திண்டாடி வருகின்றனர்.

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிக் கூடங்கள் இந்த விலை உயர்வினால் இயங்க முடியாத சூழ்நிலையில் தடுமாறி வருகின்றன.

40ம் எண் நூல் கிலோவிற்கு ரூ. 245 லிருந்து ரூ. 320 ஆகவும், 30ம் எண் நூல் கிலோவிற்கு ரூ. 250 லிருந்து ரூ. 300 ஆகவும், 2/40ம் எண் நூல் கிலோவிற்கு ரூ. 280 லிருந்து ரூ. 340 ஆகவும் உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பதுக்கல், இறக்குமதி பஞ்சிற்கான வரி உயர்வு மற்றும் செயற்கை தட்டுப்பாடே என்று கூறுகின்றனர்.

நூல் விலை உயர்வினால் கைத்தறி மற்றும் விசைத்தறி, பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள 35 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நூல் விலை உயர்வினாலும், துணி உற்பத்திக்கான புதிய ஆர்டர் கிடைக்கப் பெறாததாலும், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் பல மாதங்களாக வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனர். விசைத்தறி ஒன்றின் விலை சுமார் ரூ. 1,10,000/- ஆகும். பல மாதங்களாக வாழ்வாதாரத்திற்கான வருமானமின்றி தவிக்கும் விசைத்தறி உற்பத்தியாளர்கள், தங்களது விசைத் தறியை பழைய இரும்புக் கடையில், எடைக்கு எடை என்ற முறையில், ஒரு தறியை வெறும் ரூ. 31,000/-க்கு விற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும் என்றும், பிறகு என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், கடந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்றினால் பெருமளவு பாதிப்படைந்திருந்த கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 2021-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு 169.41 லட்சம் சேலைகள் மற்றும் 169.31 லட்சம் வேட்டிகள் என்று 490.27 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டு, தொடர் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் அதிமுக அரசு ஜூலை மாதத்திலேயே விலையில்லா வேட்டி, சேலைக்கான ஆர்டரை வழங்கும் போது, நூலும் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். இதனால் குறிப்பிட்ட காலத்தில் வேட்டி, சேலைகள் தயாரிக்கும் பணி முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பே பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு விடும்.

ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றபின் விலையில்லா வேட்டி, சேலைக்கான ஆர்டர் ஆகஸ்ட் மாதம் தேதியிட்டு, நவம்பர் மாதம் தான் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையாக நூல் வழங்கப்படவில்லை. விலை உயர்வினால் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் வெளிச் சந்தையில் நூலை வாங்க முடியாமல், விலையில்லா வேட்டி, சேலையை உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட் விலையில்லா மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 750 யூனிட் விலையில்லா மின்சாரமும் அன்றைய அதிமுக அரசால் வழங்கப்பட்டு வந்தது. மேலும், கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர் வேலை வழங்கும் விதமாக, கைத்தறித் துணிகளுக்குத் தள்ளுபடி மானிய திட்டமும், 15 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி மானியமும், மாநில அரசின் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளுக்கு நூலின் தரத்தை மேம்படுத்தவும், இயந்திரங்களின் திறனை மேம்படுத்தவும், Card Wires, Cots Aprons மற்றும் Spindles ஆகிய உதிரி பாகங்களை மாற்றம் செய்யும் பொருட்டும் 2,076 கோடி ரூபாயை அதிமுக அரசு நிதி ஒப்பளிப்பு வழங்கியது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, “இறக்குமதி பஞ்சுக்கான வரியினை குறைக்கவும், மூலப் பொருள் ஏற்றுமதியினை தடை செய்யவும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்; மூலப் பொருட்களான, பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றைப் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும்; நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியினை முழுமையாக ரத்து செய்ய ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 24 நவ 2021