மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

நம்பிக்கைக்குரியவரோடு ஆளுநரை சந்தித்த ஓபிஎஸ்: அதிமுகவில் அடுத்த புகைச்சல்! 

நம்பிக்கைக்குரியவரோடு ஆளுநரை சந்தித்த ஓபிஎஸ்: அதிமுகவில் அடுத்த புகைச்சல்! 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று (நவம்பர் 23) ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அதிமுகவில் அடுத்தகட்ட  விவாதத்தை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி  ஆளுநரை சந்தித்தார். அப்போது அவருடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள்  கே.பி. முனுசாமி. வைத்திலிங்கம், மற்றும் எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்றிருந்தனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் அப்போது இந்த குழுவில் இல்லை. அவர் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்தபோது அவருக்கே தெரியாமல் ஆளுநரை எடப்பாடி சந்தித்துவிட்டார் என்று கட்சிக்குள் ஒரு புகைச்சல் இருந்தது.

இதற்கிடையே சசிகலாவை அதிமுகவுக்குள் மீண்டும் கொண்டு வரும் விவகாரத்தில் ஓபிஎஸ்சுக்கும், இபிஎஸ் சுக்கும் இடையில் கருத்து வேறுபாடு  நீடித்துக்கொண்டே இருக்கும் நிலையில், நேற்று தனக்கு நெருக்கமான, நம்பிக்கையான  ஜே.சி.டி.பிரபாகரை அழைத்துக் கொண்டு ஆளுநரை சந்தித்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

சசிகலாவை இணைப்பது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு உடனடியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்தார். ‘சசிகலாவுக்கு ஆதரவு தெரித்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும்’ என்றும் அவர் கூறினார். கே.பி. முனுசாமியும்  அப்போது ஓ.பன்னீருக்கு எதிரான தொனியிலேயே கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக  அதிரடியாக பேட்டி கொடுத்தவர்தான் ஜே.சி.டி.பிரபாகர். அப்படிப்பட்ட தனக்கு நம்பிக்கையான ஜே.சி.டி.பிரபாகரோடு சென்று ஆளுநரை சந்தித்திருக்கிறார்  ஓ.பன்னீர் செல்வம்.   

“ஏற்கனவே அதிமுகவின் வழிகாட்டு குழு உறுப்பினராக பிரபாகரை நியமித்தார்  ஓ.பன்னீர் செல்வம்.   அமைப்புச் செயலாளர், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளராகவும் இருக்கிறார் பிரபாகர். இன்று  (நவம்பர் 24)  அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் தனது தனிப்பட்ட நம்பிக்கைக்குரிய நண்பரோடு  ஆளுரை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.  மற்ற நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் அழைக்கவில்லை.  ஆளுநரை சந்திப்பதிலேயே இப்படி பன்னீருக்கும், எடப்பாடிக்கும் போட்டியிருக்கிறது என்றால் தேர்தலை சந்திப்பதில் எத்தனை போட்டிகள் இருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்” என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

-வேந்தன்

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

புதன் 24 நவ 2021