மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

ஓட்டுநர் தாக்குதல் - முதல்வரின் பதில் என்ன?: ஈபிஎஸ்

ஓட்டுநர் தாக்குதல் - முதல்வரின் பதில் என்ன?: ஈபிஎஸ்

மதுரை - திருப்பூர் பேருந்தில் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு முதல்வரின் பதில் என்ன என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் ஆடு திருடர்களை விரட்டி சென்று பிடித்தபோது, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மதுரையிலிருந்து TN-63 N-1802 என்ற எண் கொண்ட பேருந்து திருப்பூர் நோக்கிச்சென்று கொண்டிருந்தது. அரசுப் பேருந்து மதுரை காளவாசல் கோச்சடை வழியாக திருப்பூர் செல்வதற்காக காளவாசலை அடுத்த பாண்டியன் பல்பொருள் கூட்டுறவு அங்காடி முன்பு சென்றபோது, பின்னால் வந்த இன்னோவா சொகுசு கார் முந்தி செல்வதற்கு பலமுறை ஹாரன் அடித்தப்படி வந்துள்ளது. ஆனால், அந்த சாலை குறுகலாக இருப்பதால் அரசு பேருந்து மெதுவாக சென்றதுடன், காருக்கும் வழிவிட முடியவில்லை.

வழிவிடாததால் ஆத்திரமடைந்த இன்னோவா காரில் வந்த கும்பல் பேருந்தை வழிமறித்து அரசுப் பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநரின் கையில் கம்பியால் தாக்கியதோடு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தகவல் பரவியதையடுத்து, அங்கிருந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பொதுமக்கள் அனைவரும் ஓட்டுநரை தாக்கிய வாகனத்தில் வந்தவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துவிட்டனர்.

பொது இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்களை சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகளில் பதிவான அடையாளத்தைக் கொண்டு போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து, இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப் பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து, மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது. இதற்கு காவல் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-வினிதா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

புதன் 24 நவ 2021