மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி: விலை எவ்வளவு?

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி: விலை எவ்வளவு?

தமிழகத்தில் வெளிச் சந்தைகளில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசுத் தெரிவித்துள்ளது.

மழைக்காலத்துக்கு முன்பு 4 கிலோ, 5 கிலோ தக்காளி 100 ரூபாய் என விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகக் கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் விளை பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. இதனால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

தற்போது ஒரு கிலோ ஆப்பிளுக்கு இணையாகத் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனைக் கடைகளில் 140 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகிறது. விலை உயர்வால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாகக் காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. இதனால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையைவிடக் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும், குறிப்பாகத் தக்காளி விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் வெளிச்சந்தையில் தற்போது ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி, கூட்டுறவுத் துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

இதற்காக, முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 எம்.டி. தக்காளி கொள்முதல் செய்யவும், இதனை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி விலை உயர்வால் வழக்கம் போல், இணையவாசிகளும், இல்லத்தரசிகளும் தக்காளி இல்லாமல் எப்படிச் சமைப்பது என கூகுளில் தேடி வருகின்றனர். இதனால் கூகுளில் அதிகம் தேடும் வார்த்தையாகக் கடந்த இரு நாட்களாக ‘தக்காளி’ உள்ளது.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 24 நவ 2021