மகளிர் சுய உதவிக் குழு: அதிமுகவை குற்றம்சாட்டிய முதல்வர்!

politics

அதிமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சின்னாபின்னமாகிவிட்டன என்று திருப்பூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

நேற்று நவம்பர் 22ஆம் தேதி காலை கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலை திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் 23 பேருக்குத் தொழில் கடன் உதவியைத் திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் வழங்கினார். அதுபோன்று பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“ மொத்தம் 18 அரசுத் துறைகளின் சார்பில் இந்த நிதி உதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

அடுக்குமாடிக் குடியிருப்பு ஆணை, சிறு குறு தொழில் செய்யக் கடன் உதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்திரம், வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை கைம்பெண் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள், குடும்ப அட்டைகள் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் ஆகியவை தரப்பட்டுள்ளன.

இந்த அரசு என்பது தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்தச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாகத் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 670 சுய உதவிக் குழுக்களுக்கு 25 கோடி ரூபாய் அளவில் கடனுதவி வழங்கப்படுகிறது.

1989ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது கலைஞர் அவர்களால் தர்மபுரி மாவட்டத்தில் முதன்முதலாக மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் கடந்த காலத்தில் குறிப்பாகக் கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு எந்த அளவிற்கு மோசமான நிலைக்குப் போனது என்பது உங்களுக்குத் தெரியும். அதிமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சின்னாபின்னமாகிவிட்டன. எனவே அதனை மீண்டும் முழுமையாகப் புதுப்பிக்கத் திட்டமிட்டு இன்றைய நாள் 25 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் இந்த நிகழ்ச்சியின் மூலமாக வழங்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆறு மாத காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 230 கோடி ரூபாய் கடனாக 5,420 குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்பது போல மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுவதும் ரத்து செய்யப்பட்டன என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “திருப்பூர் மாவட்டம் என்பது ஒரு தொழில் மாவட்டம். அதிலும் குறிப்பாகச் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் களஞ்சியமாக இந்த மாவட்டம் உள்ளது. கொரோனா காலத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடவும் அவற்றின் வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைச் செய்தது.

2,739 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 179 கோடி ரூபாய் முதலீடு மானியமாக வழங்கப்பட்டது.

மாநில கடன் உத்தரவாத நிதியம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 100 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் இது விரைவில் செயல்படத் தொடங்கும்.

சென்னை போன்று கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காகக் கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும் என்று கூறினேன். சென்னை, கோவை மட்டுமல்ல திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சியையும் மனதில் வைத்து திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைக்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானிய உச்ச வரம்பு ரூ.50 லட்சத்திலிருந்து 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது “என்று குறிப்பிட்டார்.

இறுதியாக, ”ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலம் தான் ஆகிறது. இன்னும் நான்கரை வருடங்கள் இருக்கிறது. ஆறுமாதத்தில் இப்படி பணிகளைச் செய்து இருக்கிறோம் என்றால் நான்கரை ஆண்டிற்கு இன்னும் என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *