மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 27 அக் 2021

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

பிஜிஆர் நிறுவனம் குறித்து அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் அவதூறாக கருத்துத் தெரிவித்ததற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம், 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அந்நிறுவனம் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தமிழகத்தில் ஒரு திவாலான எனர்ஜி கம்பெனி 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை தமிழக மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. ஆளும்கட்சிப் பிரமுகர் ஒருவர் அந்த கம்பெனியை விலைக்கு வாங்கி அதனை தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து இந்த ஒப்பந்தத்தை செய்ய முடிவு செய்திருக்கிறார். அந்தக் கம்பெனியின் பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை. இது நீடித்தால் இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்சார வாரியத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும். இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதனையடுத்து, மின்சார வாரியம் சார்பில் வழங்கப்பட்ட பணப்பட்டுவாடா விவரங்கள் கொண்ட எக்ஸல் சீட் ஒன்றை அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டார். இதுகுறித்து இருவருக்கும் இடையே ட்விட்டரில் பெரிய போர் நடைபெற்றது.

தொடர்ந்து அண்ணாமலை ட்விட்டரில், “கோபாலபுரம்….. பிஜிஆர் எனர்ஜி…… மின்சார அமைச்சகம்…… செந்தில் பாலாஜி….. இந்த நான்குப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள்... விடை எளிதில் புரியும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிஜிஆர் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தங்களது நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மின்திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் திவாலான நிறுவனம் என்றும் தங்கள் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்று அவதூறாக ட்விட்டரில் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை தெரிவித்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, பொய்யானவை. பிஜிஆர் நிறுவன இயக்குநர் ரமேஷ்குமார் குறித்து ட்விட்டரில் அவதூறாகப் பதிவிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். மேலும், இதுபோன்று ட்விட்டரில் எந்தவிதமான ஆதாரமற்ற தகவலையும் தெரிவிக்கக் கூடாது. நோட்டீஸ் பெறப்பட்ட பத்து நாட்களுக்குள் நஷ்டஈடு வழங்க வேண்டும் மற்றும் ட்விட்டரிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கறிஞர் நோட்டீஸை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, “சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். அறிவாலயத்தில் இருக்கும் அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. அங்கு சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் இந்த ட்விட்டர் பதிவு குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

-வினிதா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

புதன் 27 அக் 2021