மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 27 அக் 2021

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

“சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது பற்றி கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூடிப் பேசி முடிவெடுப்பார்கள்” என்று மருதுபாண்டியர்களுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி கூறியது அதிமுகவில் மீண்டும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 20 ஆம் தேதி, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது... சசிகலா தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுவருவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது கோபமாக எடப்பாடி, ‘சூரியனைப் பார்த்து ஏதோ குரைத்தது போல....’ என்று பதிலளித்தார். தனக்கு முதல்வர் பதவி அளித்த சசிகலாவை இவ்வளவு கீழ்த்தரமாக எடப்பாடி விமர்சித்ததை அதிமுகவிலேயே பலரும் விரும்பவில்லை.

இந்த நிலையில்தான் அக்டோபர் 25 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம், “ஓர் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது அண்ணா கற்று கொடுத்த கொள்கை. அதுதான் அதிமுகவின் பூர்வாங்கக் கொள்கை” என்று எடப்பாடியை பெயர் குறிப்பிடாமல் நேரடியாகவே விமர்சித்தார். மேலும், “அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள்” என்றும் பேசி அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் பன்னீரின் பேட்டியைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி கோபமாகி கே.பி. முனுசாமியை அழைத்திருக்கிறார். ‘அவர் (ஓபிஎஸ்) தொடர்ந்து அதே திசையிலதான் போயிட்டிருக்காரு. நாம ஒண்ணு சொன்னா அவர் ஒண்ணு சொல்றாரு. நீங்களே அவர்கிட்ட பேசுங்க. இந்த பேட்டிக்கு விளக்கம் கொடுக்கச் சொல்லுங்க. இல்லேன்னா நல்லா இருக்காதுனு சொல்லிடுங்க’ என்று முனுசாமிக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து ஓ.பன்னீருக்கு போன் செய்து பேசியிருக்கிறார் கே.பி. முனுசாமி.

“என்னண்ணே... மறுபடியும் இதேபோல பேசியிருக்கீங்க. எடப்பாடி உங்க மேல ரொம்ப கோபமா இருக்காரு. கட்சியே சசிகலா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வச்சிடுச்சு. நீங்க ஏண்ணே கமா போட்டுக்கிட்டே போறீங்க? இது நல்லா இருக்கா?’ என்று கேட்டிருக்கிறார் கே.பி. முனுசாமி. அதற்கு ஓ.பன்னீர் செல்வம், “நான் இதுபோல பேட்டி கொடுக்கும்போதுதான் என்னை உங்களுக்கெல்லாம் தெரியுதா? கவர்னரை பார்க்க போனீங்களே, கட்சியோட ஒருங்கிணைப்பாளர் கூட வரணும்னு உங்களுக்குத் தோணலையா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.

இதில் திகைத்துப் போன கே.பி. முனுசாமி, “அண்ணே... கவர்னரை பார்க்க உங்க பெயரையும்தான் எழுதிக் கொடுத்தோம். ஆனா அவர் அப்பாயின்மென்ட் கொடுத்த அன்னிக்கு நீங்க கோயமுத்தூர்ல மூலிகைக் குளியல்ல இருந்தீங்க. நீங்க வரலைனு கவர்னர் அப்பாயின்மென்ட்டை ரத்து செய்வாரா? அதனாலதான் நாங்க போனோம். கட்சி என்னிக்கும் ஒரு தனிநபரை பத்தி சிந்திக்காதுண்ணே... நீங்க அதைப் புரிஞ்சுக்கணும். சசிகலா பத்தி நீங்க பேட்டி கொடுத்தப்ப உங்க பின்னாடி நின்ன நாலஞ்சு பேரை நம்பிடாதீங்க. அவங்க உங்களுக்கு சப்போர்ட்டெல்லாம் கிடையாது. உங்க கட்சிப் பதவிக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா அந்த இடத்துக்கு உங்க சமுதாய கோட்டாவுல பதவிக்கு வர்றத்துக்குதான் அவங்க முயற்சி பண்ணுவாங்க. அதைப் புரிஞ்சுக்கங்க. அதனால நீங்க சசிகலா பத்தி கொடுத்த பேட்டியை மறுத்தோ இல்லை அதுக்கு விளக்கம் கொடுத்தோ நீங்களே மறுபடியும் பேட்டி கொடுத்துடுங்க. இல்லேன்னா நல்லா இருக்காதுனு எடப்பாடி சொல்லச் சொன்னாரு’என்று கே.பி. முனுசாமி தனது ஆதங்கத்தை பன்னீரிடம் கொட்டியிருக்கிறார். ஆனால் இதற்கு பன்னீர் பதிலேதும் சொல்லவில்லை”என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசியதையே கே.பி. முனுசாமி ஊடகங்களிடம் பேசியிருக்கிறார். ஆனால் சசிகலா விவகாரத்தில் ஊடகங்கள்தான் கமா போடுவதாக அப்போது மாற்றிவிட்டார்.

தர்மபுரியில் அதிமுகவின் பொன் விழா ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பன்னீரின் பேட்டி பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

“ஓபிஎஸ் ஊடகங்களில் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால், தெளிவான முடிவு அதிமுக ஏற்கனவே எடுத்துவிட்டது. தலைமைக் கழகத்தில் தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என்று தீர்மானமே போட்டாகிவிட்டது. ஒவ்வொரு மாவட்டக் கழகமும் தீர்மானம் போட்டு தலைமைக்கு அனுப்பிவிட்டார்கள். இந்நிலையில் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி கேள்வியே எழவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்து போட்டு அறிவித்திருக்கிறார்கள். எனவே கட்சி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஊடகங்களாகிய நீங்கள் மேலும் மேலும் கமா போடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார் கே.பி. முனுசாமி.

கே.பி. முனுசாமி மூலமாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பன்னீர் பணியவில்லை என்றால் அடுத்த கட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கும் தயார் என்பதுதான் எடப்பாடியின் நிலைப்பாடு என்கிறார்கள் சேலம் வட்டாரத்தில்.

இதுகுறித்து பன்னீர் செல்வம் தரப்பில் விசாரித்தால், “இன்னும் சில வாரங்களில் நிலைமை மாறும்” என்கிறார்கள் ஏதோ ஒரு நம்பிக்கையோடு.

கமாவா முற்றுப்புள்ளியா என்று அதிமுக சூடாகியிருக்கிறது!

-வேந்தன்

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

புதன் 27 அக் 2021