வாக்குறுதி – மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குக : கமல்

politics

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது தொடர்பாக மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குக என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளைக் கொடுத்தது. கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில் 202வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார்.

இந்நிலையில் மநீம தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையில், ”2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களுக்கு திமுக 505 வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அவற்றில் இன்றுவரை நிறைவேற்றப்படாத மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை இப்போது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் 491-வது வாக்குறுதி, ‘திட்டங்கள் செயலாக்கம் என்கிற புதிய அமைச்சகம் ஏற்படுத்தப்படும்’ எனச் சொல்கிறது. அதன் விவரம் வருமாறு:

‘திட்டங்கள் செயலாக்க அமைச்சகம்’ என்னும் பெயரில் ஒரு புதிய அமைச்சகம் அமைக்கப்பட்டு, மூத்த அமைச்சரின் பொறுப்பில் இருக்கும். இந்த அமைச்சகத்துக்குக் கீழ்க்காணும் அலுவல்கள் பொறுப்பாக்கப்படும்.

அ) மாநில திட்டக்குழு இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும். மேலும் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள் மற்றும் செயல் அம்சங்கள் மீதான இலக்குகளைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதை இந்த அமைச்சகம் கண்காணித்து நிறைவேற்றும்.

ஆ) தேர்தல் நேரத்தில் பொது மக்களால் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கையை 100 நாட்களுக்குள் எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுவதைக் கண்காணிக்கும்.

இ) அரசு பதவியேற்ற 100ஆவது நாள் அன்று முதல்வர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை மக்களுக்குத் தெரிவிப்பார். ஒவ்வொரு மாதத்தின் முதல் பணி நாளன்றும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை முதல்வர் மேற்கொள்வார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து அரசின் சாதனை அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்குவார்.’ இவ்வாறு சொல்கிறது அந்த வாக்குறுதி.

ஆனால் திமுக அரசு பதவியேற்று இன்றுடன் 173 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஊடக சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு கூட்டங்களில் தெரிவித்து வருகிறார். ஆனால் ‘திட்டங்கள் செயலாக்க அமைச்சகம்’ அமைக்கப்படும் மற்றும் மாதந்தோறும் ஊடகங்களிடம் ரிப்போர்ட் கார்டு வழங்கப்படும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இதுவரை செயல்படுத்தப்படவில்லை. வரும் நவம்பர் 1ஆம் தேதி திங்கள்கிழமை மாதத்தின் முதல் பணி நாளாகவே அமைகிறது. அந்த நாளுக்கு வேறு ஒரு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. அந்நாளில்தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த சிறப்பு மிக்க நாளிலிருந்து மேற்குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரிப்போர்ட் கார்டினை ஊடகங்களுக்கு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *