மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 அக் 2021

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை அவ்வப்போது திமுகவும் அதிமுகவும் சேதப்படுத்துவது தமிழ்நாட்டு அரசியல் வாடிக்கையாகிவிட்டது.

இது திமுகவின் முறை போல. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தேமுதிகவை குறிவைத்து அதன் நிர்வாகிகளை வேட்டையாடி வருகிறது.

இந்த வகையில் தேமுதிக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரைகாமராஜ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேமுதிக நிர்வாகிகளுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று( 24 ஆம் தேதி) திமுக வில் இணைந்தார். இது மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சில தேமுதிக பிரதிநிதிகளையும் திமுகவில் தொடர்ந்து இணைத்து வருகின்றனர் அமைச்சர்கள்.

இப்படி தேமுதிக தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் நிலையில் தான்... விரக்தி அடைந்த விஜயகாந்த் இன்று (அக்டோபர் 25) உருக்கமாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

"தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே உயர்ந்த நோக்கதோடும், இலட்சியத்தோடும் ஆரம்பிக்கப்பட்ட கழகம் தேமுதிக என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எந்த சுயநலமும் இல்லாமல், மக்கள் நலன் கருதி, நம்முடைய கழகம் ரசிகர் மன்றமாக இருந்து, பின்னாளில் கழகமாக உருவாகுவதற்கும், எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் நீங்கள்தான். மேலும், உங்கள் அத்தனை பேரின் விருப்பத்தையும், வேண்டுதலையும் ஏற்று இரண்டாயிரத்தில் நமது ரசிகர் மன்றத்திற்காக கொடியை அறிமுகப்படுத்தி, 2005 ல் அதை கழகமாகவும், அரசியல் கட்சியாகவும் மாற்ற வேண்டுமென்று உங்கள் அனைவரின் விருப்பத்திற்கிணங்க உலகமே வியக்கும் அளவுக்கு பிரம்மாண்ட மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி, நாம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை உருவாக்கினோம்.

அனைவரும், கஷ்டப்பட்டு வளர்த்த நமது கட்சியை, இன்றைக்கு யாரோ ஒரு சிலர் மூளைச்சலவை செய்பவர்களின் பேச்சை நம்பியும், ஆசை வார்த்தைகளை கூறி மோசம் செய்யும் கயவர்களை நம்பியும் கழகத்தை விட்டு நீங்கள் செல்வது எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கழகத்திற்கும் செய்யும் துரோகமாக கருதுகிறேன்.

மேலும் மாற்று அணியினர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி அவர்களுடன் நீங்கள் செல்லும் போது, அது உங்களை பலவீனமானவர்களாக இருப்பதை காட்டுவதாகவும், இதை எண்ணும் போது ”இக்கரைக்கு அக்கரை பச்சை” என்பதை உணரும் நாள் வரும்"இன்று குறிப்பிட்டுள்ள விஜயகாந்த் மேலும்,

"எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. நமது கழகம் நிச்சயம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும். நமது கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். மேலும்,மூளைச்சலவை செய்பவர்கள், ஆசை வார்த்தை பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கண்டிப்பதோடு, அடையாளம் கண்டு, தலைமைக் கழகத்திற்கு தெரிவியுங்கள். இனிவரும் காலங்களில் வளர்ச்சி பாதையை நோக்கி நமது கழகத்தை வலிமை மிக்கதாக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து கொண்டு செல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன், பிரியா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

திங்கள் 25 அக் 2021