மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 அக் 2021

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழலான தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர். இளங்கோவனைக் குறிவைத்து அதிரடி ரெய்டு செய்ய முடிவுசெய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் ஒரு வாரத்துக்கு முன்பே இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பி,களுக்கு ஆன் லைன் கிளாஸ் எடுத்துள்ளனர்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மேற்கு சரகம் எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவின்பேரில் சேலம் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அக்டோபர் 21ஆம் தேதி, இளங்கோவன் மீது வழக்குப் பதிவு செய்தார். வழக்கின் விசாரணை அதிகாரியாக நாமக்கல் டிஎஸ்பி ராஜேஷ் நியமிக்கப்பட்டு... நேற்று அக்டோபர் 22ஆம் தேதி, சேலத்தில் உள்ள இளங்கோவன் வீடு அவரது மாமனார் வீடு உறவினர்கள், நண்பர்கள் வீடு எனத் தமிழகம் முழுவதும் 33 இடங்களில் ரெய்டு செய்தனர்.

ரெய்டு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி மயில்வாகனன், டிஐஜி லட்சுமி, ஐஜி குல்கரனி மூவரும் தமிழகத்தில் உள்ள விஜிலென்ஸ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களுக்கு ஜூம் மீட்டிங் நடத்தினார்கள். கூட்டத்தில் பேசிய எஸ்.பி. மயில்வாகனன், “முக்கியமான ஒருவருக்கு பொறிவைத்துள்ளோம். அதில் மிக கவனம் வேண்டும். ரெய்டு செய்யும்போது வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி அறக்கட்டளைக்குள் போனதும் பின்வழியில் ஒரு போலீஸ், முன் வழியில் ஒரு போலீஸ் நிறுத்தவேண்டும். உள்ளேயிருப்பவர் வெளியில் வரக்கூடாது, வெளியில் இருப்பவர் உள்ளே வரக்கூடாது.

தரையிலிருந்து மொட்டை மாடி வரையிலும் சுற்று மதில்கள் சைடில் பார்க்கவேண்டும். சோதனையின் போது வைஃபை நெட் இருந்தால் ஆஃப் செய்திடவேண்டும், செல்போன் மற்றும் லேண்ட் லைன் அனைத்தையும் துண்டிக்கவேண்டும்.

பீரோவின் உள் பகுதியில் ரகசிய அறை இருக்கிறதா என்று பாருங்கள். கட்டிலில் கீழ்ப் பகுதியில் கவனித்து பாருங்கள். பாத்ரும்களில் வாட்டர் ஹீட்டர் டிரம் கழட்டி பாருங்கள். வாஷிங் மிஷின், வாட்டர் டேங், தரையில் தண்ணீர் தேக்கி வைக்கும் சம்ப் ஆகியவற்றைத் திறந்து பார்க்கவேண்டும். தரையைக் காலால் தட்டிப் பாருங்கள் ரகசிய அறை இருக்கா என்று, தலையணை பெட் அனைத்தையும் பாருங்கள்” என்று வழக்கமான ரெய்டு ஆயத்தங்களை பட்டியலிட்டார்.

அதன்படியே நேற்று அக்டோபர் 23ஆம் தேதி, இளங்கோவனைக் குறிவைத்து ரெய்டுக்கு சென்றார்கள். காலை 6.00 மணிக்கு இளங்கோவன் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. இளங்கோவன் எங்கே சென்றிருந்தார் என்பதை மின்னம்பலத்தில் இன்று (அக்டோபர் 23) காலை 7மணி பதிப்பில் விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

சேலம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் இருந்த இளங்கோவனின் நான்குமாடிகள் கொண்ட வீடு ஜொலித்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் இளங்கோவின் செல்போன், வைஃபை ஆஃப் செய்யப்பட்டது. ஒவ்வொரு அறைகளிலும் உள்ள பாத்ரூம் பெட் ரூம்களை பிரித்து மேய்ந்துட்டார்கள். தண்ணீர் தொட்டிகளிலும் இறங்கி பார்த்துவிட்டார்கள். தலையணைகள், பெட்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தார்கள்.

மூன்று வீடுகள் தள்ளி இளங்கோவின் மாமனார் வீட்டிலும் ரெய்டு செய்தனர்.

விஜிலென்ஸ் அதிகாரிகள் இளங்கோவன் குடும்பத்தாரிடம் விசாரணை செய்தனர். குடும்ப பின்னணியைப்பற்றி விசாரித்தனர்.

இளங்கோவன் மனைவி பிராமணர் சமுதாயம். மாமனார் சாம்பமூர்த்தி, மாமியார் வத்சலா இருவரும் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள். இவர்களுக்கு மூன்று பெண்கள், ஒரு ஆண். இரண்டாவது பெண்ணைதான் இளங்கோவன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மாமியார் வத்சலா வளர்ந்தது எல்லாம் முன்னாள் நீதிபதி கைலாசம் கவுண்டர் வீட்டில்தான். வத்சலாவின் அப்பா முன்னாள் நீதிபதி கைலாசம் வீட்டில் கணக்குப் பிள்ளையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைலாசம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இருக்கிறாரே அவரது மாமனார்தான். ப.சியின் மனைவி நளினியும் வசத்சலாவும் அக்கா தங்கைகள்போல்தான். தற்போது வரையில் தொடர்பிலிருந்துவருகிறார்கள் என்பதை விஜிலென்ஸ் போலீஸார் குறித்துக் கொண்டனர்.

“இளங்கோவன் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், நகைக் கடைகள் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் மற்றும் சுவாமி அய்யப்பன் அறக்கட்டளை, முசிறியில் செயல்பட்டுவரும் முசிறி இன்ஸ்டியூட்ஸ் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் உட்பட, சென்னையில் - 3 இடங்கள், கோயம்புத்தூர் - 1 இடம், நாமக்கல் - 3 இடங்கள், முசிறி - 6 இடங்கள் மற்றும் சேலம் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன

இந்த ரெய்டில் பணம் ரூ.29.77 லட்சங்கள், 10 - சொகுசு கார்கள், 2 - வால்வோ சொகுசு பேருந்துகள், 3 கணினி ஹார்டு டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 21.2 கிலோ கிராம் (2650 சவரன்) தங்க நகைகள், 282 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி வைப்புத்தொகை ரூ.68 லட்சம் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்குத் தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

2016 வரையில் பூர்விக வீடு தவிர ஒன்றும் இல்லாத இளங்கோவனுக்கு தற்போது பள்ளி கல்லூரி, கம்பெனி, வால்வோ பஸ், சொகுசு கார்கள், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிகள் என இன்றைய மார்கெட் வேல்யூவின்படி 2ஆயிரம் கோடிகள் சொத்துகள் இருக்கும்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எது வாங்கினாலும் இளங்கோ வீட்டில் நிறுத்துங்கள், அங்கே கொடுத்துடுங்க என்றுதான் சொல்லுவார். பெரும்பாலும் அவரது மூலமாக வந்த சொத்துகள்தான் அதிகம், தொடர் விசாரணையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான பரிமாற்றத் தொடர்புகள் அல்லது வாக்குமூலம் கொடுத்தால் அதைவைத்து இபிஎஸ் குறிவைத்தும் ரெய்டு நடத்த வாய்ப்புகள் உள்ளது. குறுகிய காலத்திலேயே எடப்பாடியின் அருளால் எக்குதப்பாக வளர்ந்த இளங்கோவனுக்கு அதிமுக,வுக்குள் ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருக்கின்றன. எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் சேலம் மாவட்ட அமைச்சர் என்ற கெத்தோடு செயல்பட்டவர் இளங்கோவன். சேலம் மாவட்டத்தைத் தாண்டி தமிழகம் முழுதும் பல விஷயங்களில் தலையிட்டவர். அவரால் பாதிக்கப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களே பல தகவல்கள் கொடுத்தார்கள்” என்கிறார்கள் விஜிலென்ஸ் வட்டாரத்தில்.

-வணங்காமுடி

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

சனி 23 அக் 2021