மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 அக் 2021

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்களுக்குள் ஒன்றிய தலைவரையும், மாவட்ட ஊராட்சித் தலைவரையும் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நேற்று (அக்டோபர் 22) தேர்தல் நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களில் முடிந்தது. இதில் ஆங்காங்கே திமுகவுக்குள்ளேயே சில கரைச்சல்கள் நடந்தாலும் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனின் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கலாட்டாக்களும் மோதல்களும் அரங்கேறின.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் நடந்த மோதல்கள் பற்றியும் அதில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் சம்பந்தப்பட்டிருப்பது பற்றியும் அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்-திமுகவினர் கோஷம் என்ற தலைப்பில் நேற்று மாலை 7 மணிக்கு மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 23) திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ஆலங்காயம், குடியாத்தம் ஆகிய ஒன்றியங்களில் நடந்த பிரச்சினைகள் தொடர்பாக சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முனிவேல், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஞானவேல், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் பாரி (சேர்மன் சங்கீதாவின் கணவர்) ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியதற்காக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்பிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்தான் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நீக்க அறிவிப்பு திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரிலேயே வெளியாகியிருப்பதுதான் திமுகவில் தலைமை முதல் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மத்தியிலும் விவாதப் பொருளாகியிருக்கிறது. திமுக வரலாற்றில் இது வினோதமாகவும் வியப்பாகவும் பார்க்கப்படுகிறது.

ஆலங்காயம் ஒன்றியத்தில் மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜின் மகன் பிரபாகரனின் மனைவி காயத்ரி சேர்மன் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் துரைமுருகனின் ஏலகிரி தோட்டத்தை கவனித்து வரும் பாரி தனது மனைவி சங்கீதாவை சேர்மன் ஆக்க வேண்டும் என்று கதிர் ஆனந்திடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து மாவட்டப் பொறுப்பாளரும் ஒரு காலத்தில் துரைமுருகனின் வலதுகரமாக இருந்தவருமான தேவராஜையே பகைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார் கதிர் ஆனந்த்.

தேர்தல் முடிவு வெளிவந்ததும் மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்திக்க சென்னை சென்றார். அந்த இடைவெளியில் ஆறு திமுக கவுன்சிலர்களை பாரி மூலமாகக் கவர்ந்த கதிர் ஆனந்த் அவர்களை ஓசூருக்கு அனுப்பி வைத்துவிட்டார். தேவராஜ் சென்னை சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலங்காயம் ஒன்றியத்தில் நடப்பது பற்றி முறையிட்டிருக்கிறார். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்ட அமைச்சர் நேருவைத் தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின், ‘இது பொதுச் செயலாளர் சம்பந்தப்பட்ட பிரச்சினையா இருக்கு.நீங்க உடனே நேர்ல போய் பாத்து பேசிட்டு வாங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு திருப்பத்தூர் மாவட்டத்துக்கே சென்றார். அங்கே கட்சியினரிடம் விசாரித்துவிட்டு பொதுச் செயலாளர் துரைமுருகன், மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் முன்னிலையில் கூட்டத்தை ஏற்பாடு செய்தார் நேரு. ‘தலைவர் எங்கேயும் பிரச்சினை வரக் கூடாதுனு சொல்லியிருக்காரு. அதனால நமக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வரணும்’ என்று சொல்லியிருக்கிறார் நேரு. அப்போது தேவராஜ், ‘எல்லாருக்கும் செலவு பண்ணியிருக்கேன். தேர்தலுக்கு முன்பே இதை சொல்லியிருக்கலாம். ஆனா திடீர்னு பாரியோட மனைவிக்கு சேர்மன்னு சொன்னா என்ன அர்த்தம்? மாவட்டச் செயலாளருக்கு என்ன மரியாதை இருக்கு? அவங்களுக்கும் சேர்த்து நாங்கதான் செலவு பண்ணியிருக்கோம்’ என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் நேரு பொதுச் செயலாளர் துரைமுருகனிடம், ‘என்னண்ணே இது... என்ன பண்றதுனு நீங்களே சொல்லுங்கண்ணே’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘இவனுங்க நான் சொன்னா கேக்கவா போறானுங்க...அவனுங்க கேக்க மாட்டாங்கப்பா... ‘என்று சொல்லி அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டார். இதை அப்படியே திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு கொண்டு சென்றுவிட்டார் அமைச்சர் நேரு.

இந்த கூட்டத்துக்குப் பிறகுதான் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார். தேவராஜ் ஆதரவு கவுன்சிலர்களிடம் கதிர் ஆனந்தே பேசியிருக்கிறார்.’ எங்க அப்பாதான் திமுகவின் பொதுச் செயலாளர். இன்னும் கொஞ்ச நாள்ல அந்த தேவராஜையே மாவட்டப் பொறுப்பாளர்லேர்ந்து நீக்கிடுவாரு. அதனால ஒண்ணும் கவலைப்படாதீங்க. இந்தப் பக்கம் வாங்க’ என்று பேசியிருக்கிறார். இதுவும் அமைச்சர் நேருவிடம் சொல்லப்பட்டு அவர் மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு போய் சேர்ந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் நேற்று(அக்டோபர் 22) சேர்மன் தேர்வின்போது மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜின் ஆதரவு கவுன்சிலர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்தே அதிமுக, பாமக உறுப்பினர்களின் ஆதரவோடு துரைமுருகனின் ஏலகிரி தோட்டத்தை கவனித்து வரும் பாரியின் மனைவி சங்கீதா பாரி சேர்மன் ஆக்கப்பட்டார். இதற்குப் பிறகே மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, ‘அதிமுகவினரின் கைகூலி கதிர் ஆனந்த் என்று முழக்கமிட்டனர்.

தனது அரசியல் ஆட்டத்தால் கதிர் ஆனந்த் ஆலங்காயத்தில் வெற்றிபெற்றுவிட்டார். ஆனால் குடியாத்தம் ஒன்றியத்திலும் இதேபோல மாவட்டப் பொறுப்பாளர் ஏ.பி. நந்தகுமாருக்கு எதிராக செயல்பட்டுள்ளார். ஆனால் 31 கவுன்சிலர்களில் 18 இடங்களில் திமுக வெற்றிபெற்றும் கதிர் ஆனந்தின் தலையீட்டை எதிர்த்துக் கடுமையாக போராடி, 16 ஓட்டுகளை பெற்று திமுக வேட்பாளரை வெற்றிபெற வைத்துள்ளார் மாவட்டப் பொறுப்பாளர் நந்தகுமார்.

இந்த இரு இடங்கள் பற்றியும் நேற்று மாலையே முழு ரிப்போர்ட்டை மாவட்டப் பொறுப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார் முதன்மைச் செயலாளர் நேரு. துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆதரவோடு கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களின் பட்டியலை உடனே மாவட்டப் பொறுப்பாளர்களான தேவராஜ், நந்தகுமார் ஆகியோர் பட்டியலை அனுப்பியிருக்கிறார்கள். இதுபற்றி முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது

“அவர்கள் அனைவரையும் நீக்குங்கள். இந்த அறிவிப்பை வழக்கம்போல பொதுச் செயலாளர் பெயரிலேயே வெளியிடுங்கள். கட்சியினர் தெரிந்துகொள்ளட்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். இதையடுத்தே இன்று முரசொலியில் ஆலங்காயம், குடியாத்தம் ஒன்றியங்களில் கழகக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் என்று குறிப்பிட்டு பொதுச் செயலாளரான துரைமுருகன் பெயரிலேயே ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதாவது துரைமுருகனின் ஆதரவாளர்கள் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு மூலமாகவே நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கடுமையான மெசேஜ் அனுப்பியிருக்கிறார் என்கிறார்கள் வேலூர் மாவட்ட நிர்வாகிகள்.

-ஆரா

துரைமுருகன் பெயரைச் சொல்லி...ஆலங்காயம் திமுக அட்டகாசம்

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

சனி 23 அக் 2021