மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 அக் 2021

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

அண்ணாமலையின் தலையில் களிமண் மட்டும் தான் உள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், தேவைப்படும்போது அதுகுறித்தான ஆவணங்களை வெளியிடுவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால், அதை வெளியிட வேண்டியதுதானே..அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆதாரங்களை வெளியிட வேண்டும், இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இருவரும் ட்விட்டரில் பல தகவல்களை மாறி மாறி பதிவிட்டு கடுமையான வாக்குவாதம் நடந்தது.

இந்நிலையில் இன்று(அக்டோபர் 22) தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னகம் - நுகர்வோர் சேவை மைய செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார வாரியம் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் மாற்றப்பட்ட மின்கம்பங்கள் உள்ளிட்ட மின் வாரிய பணிகளை பட்டியலிட்டார்.

அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர்,”போகிற போக்கில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் நாலு வரியை போட்டுவிட்டு, செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடி ஒளிகிற ஆட்கள் நாங்கள் இல்லை. திரும்பவும் சொல்கிறேன், 24 மணி நேரத்திற்குள்ளாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆதாரம் இல்லையென்றால் முதலில் சொல்ல வேண்டியதுதானே..என்கிட்ட சரக்கு இல்லை. …என் மண்டையில் களிமண் தான் இருக்கிறது….. எதுவுமே கிடையாது என்று சொல்ல வேண்டியதானே. பிஜிஆர் நிறுவனம் தனிப்பட்ட முறையில் சலுகை பெற்றிருக்கிறது என்பதை நிரூபித்தால், நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்துங்கள் என்பதை முதல் பேட்டியிலேயே அவர் தெரிவித்து இருக்கலாமே…இப்போ சொல்லி மிரட்டுகிறார்களா….நான் களத்தை சந்திக்க தயார். அவரைப் போல சமூக வலைதளத்தில் மட்டும் பணி செய்பவன் நான் இல்லை. பொது வாழ்வில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். தற்போது இவ்வளவு பெரிய பொறுப்பை முதல்வர் கொடுத்துள்ளார். அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடு கூட தெரியாது. நாங்கள் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவதும் இல்லை.

குறுகிய காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயரை எடுத்ததால், தூய்மையான அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தங்கள் அரசியல் இயக்கத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கும் அரசின் மீதும், மின்சாரத் துறைமீதும் அவதூறு பரப்புவதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும், களத்தில் நேருக்கும் நேர் சந்திக்கவும் தயார். அவரைப் போல சமூக வலைதளங்களில் விளையாடவும் தயார். இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்து விட்டுச் சொன்னால், விவாதிக்கவும் தயார்” என்று காட்டமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள்,குளறுபடிகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு, துறையை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.

இறுதியாக ஒன்று சொல்கிறேன்..அரசியல் இயக்க தலைவர்களோ, அரசியல் சார்ந்த தலைவர்களோ, அல்லது சமூக செயற்பாட்டார்களோ யாராக இருந்தாலும் சரி அரசின் மீதும், மின்சாரத் துறை மீதும் தெரிவிக்கக் கூடிய புகாருக்கு ஆதாரம் இருந்தால் செய்தி வெளியிடுங்கள். அவர் வீட்டில் ரெய்டு நடத்தினால் தெரியும், டீக்கடையில் நாலு பேர் பேசினார்கள் அதுதான் ஆதாரம் என்று சொல்வது ஒரு கட்சியின் தலைமை பண்புக்கு அழகல்ல.இதுவே இறுதியாக இருக்கட்டும்” என்று கூறினார்.

இந்நிலையில், திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ மின்சார வாரியம் தொடர்பான புகாருக்கு, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லியது போல் மன்னிப்பு எல்லாம் என்னால் கேட்க முடியாது. வழக்குத் தொடர்ந்தால் அதனை நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அண்ணாமலை ட்விட்டரில், ”2011-16ல் போக்குவரத்து மோசடி,2015ல் வேலை மோசடி , 2011-16 களில் நதி மணல் மோசடி ,2016 ல் ஓட்டுக்காக பணம் மோசடி. தற்போது 2021ல் மின்சார ஊழல். அவர் மின்சாரத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்”என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

வெள்ளி 22 அக் 2021