மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 அக் 2021

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அக்டோபர் 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

அந்த சோதனையின் போது கிடைத்த ரொக்கம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வந்தது. இதுதவிர இந்த சோதனையின்போது ஒத்துழைப்பு இல்லாதது, அலுவலகம் மற்றும் வீடு பூட்டப்பட்டிருந்தது ஆகிய காரணங்களால், லஞ்ச ஒழிப்புத்துறை விஜயபாஸ்கர் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களுக்குச் சீல் வைத்தது.

இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், முருகன் ஆகியோரது வீடுகள் மற்றும் நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோன்று இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான கூட்டுறவுச் சங்கத் தலைவர் இளங்கோவன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

இளங்கோவனும் அவரது மகன் பிரவீன்குமாரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

2014 முதல் 2020 வரை இளங்கோவன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் பெயரிலும் தன் மகன் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும், 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 30 லட்சம் ரூபாயாக இருந்த இளங்கோவனின் சொத்து மதிப்பு தற்போது 5.6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இளங்கோவன் தனது வருமானத்திற்கு அதிகமாக 131 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாகக் கூறியுள்ளது. எனவே, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன் பாளையத்திலுள்ள இளங்கோவனின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் தவிரச் சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது.

ஏற்கனவே விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது நெருங்கிய நண்பரான கூட்டுறவுச் சங்கத் தலைவர் இளங்கோவனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும், அதனடிப்படையில் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-வணங்காமுடி

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

வெள்ளி 22 அக் 2021