மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 அக் 2021

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 24 மணி நேர கெடு கொடுத்திருந்த நிலையில், அவர் சில ஆதாரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் ஒரு திவாலான எனர்ஜி கம்பெனி 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை தமிழக மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. ஆளும்கட்சிப் பிரமுகர் ஒருவர் அந்த கம்பெனியை விலைக்கு வாங்கி, அதை தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து இந்த ஒப்பந்தத்தை செய்ய முடிவு செய்திருக்கிறார். ஒருவேளை அப்படி நடந்தால் இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 20) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “பொத்தம் பொதுவாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகிறார். சரியாக எதுவும் தெரியாமல் அவதூறு பரப்புவதை அவர் தவிர்க்க வேண்டும். இது பக்குவமற்ற ஒன்று. அடுத்த 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிட வேண்டும். எங்கு வேண்டுமானாலும் நான் வர தயார். அப்படி ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால், மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சவால் விட்டிருந்தார்.

இதையடுத்து அண்ணாமலை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், “தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் கடந்த சில மாதங்களாக எந்த வித கட்டணத்தையும் செலுத்தவில்லை. இந்தச் சூழலில் திடீரென 4% கமிஷன் பிடித்தம் போக 29.64 கோடி ரூபாய் விடுவித்திருக்கிறது. இதற்கு பதில் சொல்லுங்க” என்று கேட்டிருக்கிறார்.

மேலும், “நாங்கள் இப்போது எதைப் பற்றி பேசுகிறோம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஐந்து ஆலோசகர்கள் சென்னையில் வீட்டில் அமர்ந்து கொண்டே நான்கு சதவிகிதம் கமிஷனை வசூலித்து வருகின்றார்கள். இந்த வாரம் அனல்மின் நிலையம், அடுத்த வாரம் சோலார், அடுத்த வாரம் இன்னும் பெரிய நிறுவனம் தயாராகி வருகிறது” என்று பதிவிட்டு, அதோடு, ஒரு எக்ஸல் சீட்டில் உள்ள கணக்குகளையும் இணைத்திருந்தார்.

அண்ணாமலையின் ஆதாரம் குறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது கூட தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்தத் தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷன் என மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்.

2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ.15,541 கோடி நிலுவையில் இருந்தது. அக்.1இல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அண்ணாமலை, “கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை” என்று புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிவினை டேக் செய்து, முதல்வர் ஸ்டாலின் கடந்த 2016 காலக்கட்டத்தில் பேசிய வீடியோவை இணைத்து, இதுதான் ஆதாரம் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி,“செப் 24 முதல் அக் 19 வரை பயன்படுத்திய மின்சாரம் 6200 மில்லியன் யூனிட். அதில் இந்திய மின் சந்தையில் வாங்கியது 397 மி.யூ. அதிலும் ரூ. 20க்கு வாங்கிய மின்சாரம் 65 மி.யூனிட் மட்டுமே. ரூ.20க்கு குஜராத் கொள்முதல் செய்த மின்சாரம் 131 மி.யூனிட்கள். கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அக்டோபர் 18ஆம் தேதியன்று இந்திய மின் சந்தையில் தமிழகம் வாங்கியது 7.66 மி.யூ., குஜராத் வாங்கியது 45 மி.யூ, மகாராஷ்டிரா வாங்கியது 18 மி.யூ., ஹரியானா வாங்கியது 14 மி.யூ., இந்திய மின் சந்தையில் அக்டோபர் 18 அன்று விலை, குறைந்தபட்சம் ரூ.1.99/- யூனிட். அதிகபட்ச விலை ரூ 8.50/- யூனிட், சராசரி ரூ.6.00/- யூனிட். அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸப் வீரர்களும் IEX இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்க ட்விட்டரில் ’எக்ஸல் சீட்டு அண்ணாமலை’ என்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

வியாழன் 21 அக் 2021