மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 அக் 2021

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 90 சதவீதத்துககும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றன. கிட்டத்தட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றை திமுக கைப்பற்றி உள்ளது.

வெற்றி பெற்ற திமுகவின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்களோடு கடந்த இரு தினங்களாக திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவ்வாறு வாழ்த்து பெற்ற அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கோ தங்கள் சொந்த மாவட்டத்துக்கோ திரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் சில மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்னும் முதல்வர் ஸ்டாலினையே சென்று சந்திக்காமல் வேறு வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

அக்டோபர் 20ஆம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டு, 22 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது ஒன்றிய தலைவரையும்... தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தங்களது மாவட்ட ஊராட்சி தலைவரையும் தெரிவு செய்ய இருக்கிறார்கள்.

இந்த இடைவெளியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை எல்லாம், சேர்மன் பதவிக்கு இலக்கு வைத்துள்ளவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் குற்றாலம், கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, ஏற்காடு, ஏலகிரி என்று அழைத்துச் சென்று சொகுசு ஹோட்டல்களில் தங்க வைத்துக் குளிப்பாட்டி வருகிறார்கள்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச்சேர்ந்த திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் குற்றாலத்தில் இருக்கிறார்கள். இதேபோல சில மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர். கன்னியாகுமரியின் சொகுசு ஹோட்டல்களிலும் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அனைவருமே திமுக கவுன்சிலர்கள் எனும்போது ஏன் இந்த கூவத்தூர் பாணி உள்ளாட்சி அரசியல் என்று சிலர் திமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.

"உள்ளாட்சித் தேர்தல்களை பொறுத்தவரை இது எழுதப்படாத மரபுதான். இப்போது வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் வாக்களித்து தான் அந்தந்த ஒன்றிய தலைவர்களையும் மாவட்ட ஊராட்சி தலைவர் களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த நிலையில் தங்களுக்கு ஓட்டு போட வேண்டிய அந்த கவுன்சிலர்களை முன்கூட்டியே கூட்டிச்சென்று கவனித்து மகிழ வைக்க வேண்டியது சேர்மனாக தேர்வு செய்யப்பட வேண்டியவர்களின் கடமையாகிவிட்டது.

மேலும் தேர்தலின்போது இன்னார்தான் ஒன்றிய தலைவர், இன்னார்தான் மாவட்ட ஊராட்சி தலைவர் என்று அந்தந்த மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர் மூலம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு விட்டன. அவர்கள்தான் செலவுகளையும் ஏற்றனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சில இடங்களில் சில கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. திமுக கவுன்சிலர்களிலேயே வேறு ஒருவர் சேர்மனாக விரும்பலாம். தேர்தல் முடிந்த பிறகு அவர் அதிகமாக செலவு செய்து கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்யலாம். இதை தடுப்பதற்காக உள்ளாட்சி பிரதிநிதிகளை சொகுசு சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு அட்வான்ஸ் பரிசுகளும் அடர்த்தியான சூட்கேஸ்களும் வழங்கப்பட்டு அவர்கள் மனம் மாறாமல் தங்களை தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு கிட்டத்தட்ட சத்தியமே வாங்கிக் கொள்கிறார்கள்.

இதில் திமுக கவுன்சிலர்கள் மட்டுமல்ல சில இடங்களில் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்ற சுயேச்சை கவுன்சிலர்களும் அதிமுக கவுன்சிலர்களும் கூட சொகுசு பயணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சொகுசு சுற்றுலாவில் தான் அந்தந்த ஒன்றிய தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் யார் என்பது இறுதி செய்யப்படும்" என்கிறார்கள்.

ஊரக உள்ளாட்சி தேர்தலிலேயே இப்படி என்றால் அடுத்து நடக்க இருக்கும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் இதே கூவத்தூர் பாணி குற்றாலம், பாண்டிச்சேரி, ஏற்காடு, ஏலகிரி என பல இடங்களில் கவுன்சிலர்களுக்கு இன்னும் அதிக விலை வைத்து பேரம் அரங்கேறுவது உறுதி.

இதனை அறிந்து கொண்டு தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அக்டோபர் 14 ஆம் தேதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கவுன்சிலர்கள் மூலம் சேர்மன் தேர்ந்தெடுக்கப்படும் முறையில் பல பேரங்கள் நடக்கிற படியால் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி தேர்தல்களில் சேர்மன் மேயர் பதவியை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று நேற்று அக்டோபர் 14 வலியுறுத்தியுள்ளார்.

வேந்தன்

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

வெள்ளி 15 அக் 2021