மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 அக் 2021

ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: பெரியகருப்பன்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: பெரியகருப்பன்

தமிழகத்தில் கடந்த 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது.

இதன் முடிவில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்ட இடங்களில் அதிக வெற்றியை திமுக பெற்றுள்ளது. அதிமுக மிகக் குறைந்த அளவிலான இடங்களை மட்டுமே பிடித்தது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும், “திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு இடங்களில் குளறுபடி நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக உள்ளது” என்று விமர்சித்தனர்.

இதற்குப் பதிலளித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்கள் தந்த அந்த மகத்தான வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தந்த அறிக்கையில் தங்களது இயக்கம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட உண்மையை மறந்து தமிழக மக்கள் அவர்களுக்குத் தந்த படுதோல்வியை மறைத்து, முதல்வருக்குத் தமிழக மக்கள் தந்த பேராதரவால் பெற்ற மகத்தான வெற்றியையும், மேற்படி தேர்தலை, ஜனநாயக முறையில் நேர்மையாக, நடுநிலையோடு, நடத்திய தமிழகத் தேர்தல் ஆணையத்தையும், கொச்சைப் படுத்துகின்ற வகையில் வெளியிட்டுள்ள அவர்களின் கற்பனை அறிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், கடந்த 2016இல் நடக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை மூன்று வருடம் தள்ளிப் போட்டது அ.தி.மு.க அரசு.

மாநிலத் தேர்தல் ஆணையம் 26.9.2016இல் அறிவிப்பு வெளியிட்ட அன்றே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு - அந்த ஆணையத்தைத் தனது கைப்பாவையாக்கியது அ.தி.மு.க.

“தேர்தல் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது” என்று உயர் நீதிமன்றம் கண்டனம் செய்து தேர்தல் அறிவிப்பையே ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளியது அ.தி.மு.க அரசு.

பிறகு உரியக் காலத்தில் தேர்தலை நடத்தாமல் - மாநிலத் தேர்தல் ஆணையரையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வைத்தது அ.தி.மு.க அரசு.

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் நடத்துகிறோம் என வாக்குறுதி கொடுத்து விட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று “வார்டு மறுவரையறை ஆணையத்தை” உருவாக்கி அவசரச் சட்டம் பிறப்பித்து உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே தாமதம் செய்தது அ.தி.மு.க அரசு.

பிறகு மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த விடாமல் செய்தது அ.தி.மு.க அரசு.

பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தல் - நகர்ப்புறத் தேர்தல் எனப் பிரித்து - முதலில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அதுவும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிக்க அறிவித்தது அ.தி.மு.க அரசு.

அ.தி.மு.க நடத்தத் தவறிய ஊரக உள்ளாட்சித் தேர்தலை இப்போது தி.மு.கழக அரசு நடத்தியிருக்கிறது.

ஒருவர் இரு வேட்பாளருக்கு முன்மொழிந்த காரணத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் விதிப்படி நிராகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான பாஸ்கர பாண்டியன் “வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் சொல்லக்கூடிய வேட்பாளர்களைத்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” எனக் கூறியதாக ஒரு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒரு காரணம் சொல்லியிருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இப்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கு அ.தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. எத்தகைய அபாண்ட பழியை - புளுகை ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மீது சுமத்துகிறார் எடப்பாடி பழனிசாமி என்பது அ.தி.மு.கவும் அங்கு வெற்றி பெற்றுள்ளதிலேயே தெரிய வருகிறது.

திருப்பத்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அத்துமீறி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். அந்தப் புகாரைத் தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரே அந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று, “வாக்குப் பெட்டிகள் பத்திரமாக இருக்கின்றன - எதுவும் பிரிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார். தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சொன்னதைக் கூட ஓ.பன்னீர்செல்வம்-, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிந்துகொள்ள முன்வரவில்லை.

இருவரும் கொடுத்துள்ள 5 பக்க அறிக்கையில் தி.மு.கவினர் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு நிகழ்ச்சியைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. இதிலிருந்தே மாநிலத் தேர்தல் ஆணையம் அமைதியாகவும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்தியுள்ளது எனத் தெளிவாகிறது.

கடந்த பத்தாண்டுக் கால அ.தி.மு.க ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தை தங்களின் கைப்பாவையாக ஆட்டிப் படைத்த - பழைய ஞாபகத்தில் இந்தக் கற்பனைக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கிறது அவர்களது அறிக்கை.

கடந்த பத்தாண்டுக் காலத்தில் இப்போதுதான் மாநிலத் தேர்தல் ஆணையம் நியாயமாகவும் - நேர்மையாகவும் செயல்பட்டுள்ளது. காவல் துறையும் நடுநிலையோடு நடந்து கொண்டுள்ளது என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படிப் புலம்புவது ஏனோ?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 15 அக் 2021