மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 அக் 2021

டெண்டர் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: வேலுமணி

டெண்டர் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: வேலுமணி

முடிந்துபோன டெண்டர் ஒதுக்கீடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது என்று கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதனால் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்குகளை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி பொன்னி தலைமையிலான குழு, 'வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்ய ஆரம்பக் கட்ட முகாந்திரம் ஏதும் இல்லை' என்று அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசு வேலுமணி மீதான வழக்கையும் கைவிட முடிவு செய்தது. இந்த சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுக் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி சார்பில் கூடுதல் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், முகாந்திரம் இல்லை என்று அரசால் கைவிட முடிவு எடுத்த வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் உள்நோக்கத்துடனும் எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல.

டெண்டர் நடைமுறைகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வழக்கில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அறப்போர் இயக்கம் என்னுடைய அரசியல் விரோதிகளுக்கும் டெண்டர் கிடைக்காதவர்களுக்கும் நிழலாக இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளது. எனவே இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்பதால் இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அதோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையின் முதல்கட்ட அறிக்கையை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். மாறியுள்ள அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி முடிந்துபோன டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது.

என் அரசியல் வாழ்வுக்கும் நான் சார்ந்துள்ள கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது நான் அமைச்சராகப் பதவி வகிக்க வில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. எனவே அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு வரும் அக்டோபர் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 14 அக் 2021