மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 அக் 2021

சீமானை கைது செய்: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்!

சீமானை கைது செய்: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்!

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை , கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் இன்று (அக்டோபர் 12) சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவரான செல்வப் பெருந்தகை,

“தொடர்ந்து சீமான் அவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்துவது தொடர்கிறது. அவர் வாங்குகிற கூலிக்கு சரியாக வேலை பார்க்கிறார் என்று தோன்றுகிறது. உள்துறை இணை அமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்கிறார். அதுபற்றி சீமான் வாயைத் திறக்க மாட்டேன்கிறார். காங்கிரஸ் நாடு முழுவதும் விவசாயிகளுக்காக போராடுகிறது. ஆனால் காங்கிரசை அவர் இழிவுபடுத்துகிறார். நீ என்ன அரசியல் செய்கிறாய்? நீ என்ன ஹிட்லரா, முசோலினியா? காங்கிரஸ் இயக்கத்தையும், இந்திரா காந்தி குடும்பத்தையும் தொடர்ந்து விமர்சித்தால் நேராக புறப்பட்டு உன் வீட்டுக்கு வருவோம். எல்லாருக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. நாங்கள் சொல்லும் கருத்தை நாகரிகமாக சொல்லுகிறோம். சாட்டை முருகன் என்பவர் திருபெரும்புதூர் என்று மீண்டும் மீண்டும் பேசுகிறார். ராமானுஜர் பிறந்த திருபெரும்புதுரை 1991 இல் தமிழ்நாட்டில் ரத்தக்கறையாக்கியவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். இந்திரா காந்தி குடும்பத்தைப் பற்றி பேச சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை. இதைத் தொடர்ந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்” என்றார் செல்வப் பெருந்தகை.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி,

“ தமிழகத்தில் வன்முறையையும் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் சீமானும் அவரால் ஏவிடப்பட்டவர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் மனித குண்டு படுகொலைகள் நடக்கும் என்பது போலவும், அதற்கு நாம் தமிழர் இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது போலவும் சீமான் முன்னிலையில் சாட்டை முருகன் பேசியிருக்கிறார். இது சீமானின் ஒப்புதலோடுதான் , அவரோடு தூண்டுதலின் பேரில்தான் நடந்திருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே சீமானை பயங்கரவாத தடைச் சட்டம் (யுஏபிஏ) கீழ் கைது செய்ய வேண்டும் என்று டிஜிபியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம்.

அரசியல் என்பது நாம் சார்ந்த மண்ணுக்கு அமைதியையும் வளத்தையும் அன்பையும் தருவதாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாறாக சீமானின் அரசியல் பயங்கரவாதத்தையும், படுகொலைகளையும் ஆதரிப்பதாக முன்னிறுத்துவதாக இருக்கிறது. தமிழகத்தின் இளைஞர்களுக்கு சீமானால் ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது. இளைஞர்களை எளிதில் உணச்சிவசப்படுத்தி அவர்களை பயங்கரவாதத்தின் பக்கம் திருப்பி சீரழிக்கும் வேலையை சீமான் செய்து வருகிறார். எங்கள் புகாருக்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும் எடுத்துச் செல்வோம்” என்று கூறினார் ஜோதிமணி.

ஏற்கனவே பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் மீது டிஜிபி அலுவலகத்தில் ஜோதிமணி கொடுத்த புகாரில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சீமான் மீதும் புகார் கொடுத்திருக்கிறார் ஜோதிமணி.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை ஆளுநரை சந்திக்க இருக்கும் நிலையில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் டிஜிபியை சந்தித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

செவ்வாய் 12 அக் 2021