மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

செந்தில்பாலாஜி பட்ஜெட்: அதிர்ந்து போன துரைமுருகன்

செந்தில்பாலாஜி பட்ஜெட்: அதிர்ந்து போன துரைமுருகன்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர்களுக்கென ஒவ்வொரு மாவட்டத்தை, சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்து பொறுப்பாளராக்கினார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய

காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை நியமித்தார்.

திமுக பொதுச் செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் காட்பாடி தொகுதி அடங்கிய மாவட்டம் இது என்பதால் செந்தில்பாலாஜிக்கு பொறுப்பு இன்னும் கூடுதலானது. இதற்கு இன்னொரு பின்னணியும் உண்டு. ஏனென்றால் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவால் தள்ளி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5 ஆம் தேதி நடந்தது. ஆனால் அப்போது துரைமுருகன், தன்னிடம் செலவழிக்க பணம் போதுமான அளவில் இல்லை என்று சொல்லிவிட்டதால் தேர்தல் பணியாற்றச் சென்ற மாவட்டச் செயலாளர்களே அதிகமாக செலவழிக்க வேண்டியிருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அப்படித்தான். ’தன் சொந்தப் பணத்தை துரைமுருகன் எடுக்க மாட்டேன்கிறார்’ என்று பல மாசெக்களும் புலம்பினார்கள். இதன் விளைவாகவே காட்பாடி தொகுதியில் அதிர்ச்சித் தோல்வியை மயிரிழையில் தாண்டி வெறும் 746 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றி பெற்றார் துரைமுருகன்.

இதேபோன்ற நிலைமை வேலூரில் உள்ளாட்சித் தேர்தலிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். அதனால்தான் காட்பாடி, கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய வேலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளராக செந்தில்பாலாஜியை நியமித்தார். கூடவே துரைமுருகனின் நெருங்கிய நண்பரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனை அழைத்து, ‘அண்ணே... பொதுச் செயலாளர் ஏரியாவை பாத்துக்கங்க’ என்றும் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

”துரைமுருகனின் ஏரியாவுக்கு செந்தில்பாலாஜி பொறுப்பாளரா? சும்மாவே அவரு முடிச்சை அவிழ்க்கமாட்டாரு. இப்ப செந்தில்பாலாஜியை வேற போட்டுட்டாங்களா....இறுக்கி மூடிருவாரு” என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் பற்றி திமுக அமைச்சர்கள் வெளிப்படையாகவே தங்களது வட்டாரத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் துரைமுருகன் வாயார பாராட்டவும் வாய்பிளந்து வியக்கும் வகையிலும் செலவு செய்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி என்கிறார்கள் அங்கே தேர்தல் பணியாற்றிய திமுக நிர்வாகிகள்.

”பொறுப்பாளர்களாக பணியாற்றிய அமைச்சர்கள்லயே அதிகம் செலவு செய்தது செந்தில்பாலாஜிதான். தேர்தல் நடந்த பல பகுதிகள்ல திமுக சார்பா ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தாங்க. பொன்முடி போன்ற சில அமைச்சர்கள் 300 ரூபாய்தான் கொடுத்தாங்க. ஆனால் செந்தில்பாலாஜி ஏரியாவுல முதல்ல ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துட்டாரு. அதுக்குப் பிறகு அதிமுக காரங்க என்ன கொடுக்குறாங்கனு கவனிச்சுக்கிட்டே இருந்தாரு. அவங்க 300 ரூபாய் கொடுக்குறாங்கனு தகவல் கெடைச்ச பிறகு, திடீர்னு அடுத்த ரவுண்டு ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தாரு. இதை ஏரியா திமுக காரங்களே எதிர்பார்க்கலை. இப்ப 700 ரூபாய் ஆச்சா. அதோடு விடலை...தேர்தல் பிரச்சாரம் முடியுறதுக்கு முதநாளு ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான வேட்டி, சேலைய பேக் பண்ணி கொடுத்துட்டாரு. வேட்டி சேலை மொத்தமா மில்லுல இருந்து கொள்முதல் பண்ணிட்டாரு. கூட்டிப் பார்த்தால் ஒரு ஓட்டுக்கு எப்படியும் ஆயிரம் ரூபாய்க்கு மேலதான் செலவு பண்ணியிருக்காரு. பொதுத் தேர்தலுக்கே இப்படி செலவு பண்ணதில்லை துரைமுருகன். ஆனா உள்ளாட்சித் தேர்தல்ல செந்தில்பாலாஜியோட செலவை பாத்துட்டு, ‘என்னய்யா இப்படி செலவு பண்றாரு இந்தாளு என்று வாயப் பிளந்துட்டாரு. ஆனால் துரைமுருகன் ஏரியாங்குற காரணத்தாலதான செந்தில்பாலாஜியவே தலைவர் இங்க நியமிச்சாரு.அதை கரெக்ட்டா செஞ்சிட்டாரு செந்தில்பாலாஜி” என்று கூறினார்கள் ஏரியா திமுக நிர்வாகிகள்.

மேலும், “ “வாக்காளர்களுக்கு மட்டுமில்லை... அந்தந்த பகுதிகளில் தேர்தல் வேலை பார்க்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தினந்தோறும் சம்பளம் கொடுத்திருக்கிறார். ரெண்டு மூணு தெருவைதான் பாத்துக்கிட்டோம். அதுக்கே டெய்லி 200, 300னு கொடுத்திருக்காரு. துரைமுருகன் ஏரியாவுல திமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்தாங்கனு சரித்திரமே இல்லை. செந்தில்பாலாஜி இங்க புது சரித்திரமே எழுதிட்டாரு” என்கிறார்கள் லோக்கல் திமுக நிர்வாகிகள்.

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 8 அக் 2021