மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

அதிமுக பொன்விழா மாநாடு: நடத்தப் போவது யாரு?

அதிமுக பொன்விழா மாநாடு: நடத்தப் போவது யாரு?

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி ஐம்பதாவது ஆண்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குகிறது.

அதிமுகவின் பொன்விழா ஆண்டான இதை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தற்போதைய அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த 7ஆம் தேதி கூட்டறிக்கை வெளியிட்டனர்.

தமிழகம் முழுவதும் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கு மரியாதை செய்து அனைத்து ஊர்களிலும் கட்சிக் கொடியை ஏற்றி அதிமுகவின் பொன் விழாவை கொண்டாட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா தொடங்க இருக்கும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 16ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சசிகலா செல்ல இருப்பதாக ஓரிரு நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே சசிகலா மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லப் போகிறார் என்றும் அதற்குப் பின் மாவட்ட ரீதியாக சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார் என்றும் தகவல்கள் அவ்வப்போது வந்தன. ஆனால் சசிகலா இது தொடர்பான எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளவில்லை. ஆடியோ அரசியலோடு நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தனக்கு நெருக்கமான சிலரை அழைத்து பேசியிருக்கிறார் சசிகலா.

”அதிமுகவின் வெள்ளிவிழா மாநாட்டை அக்கா 1998 ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடினார். 91-96 ஆட்சிக்குப் பின் 96 ஆம் ஆண்டு ஏற்பட்ட படு தோல்வியில் இருந்து அதிமுகவை வெற்றி பாதையில் செலுத்துவதற்கு அந்த வெள்ளிவிழா மாநாடு பெரும் காரணமாக அமைந்தது. தேசிய தலைவர்களான எல்.கே. அத்வானி, கம்யூனிஸ்டு தலைவர்கள். வைகோ ஆகிய தலைவர்கள் அம்மாநாட்டில் பங்கேற்றனர். மீண்டும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைப்பேன் என்று அந்த மாநாட்டில் அக்கா சூளுரைத்து அதேபோல 2001 இல் ஆட்சியமைத்தார்.

நெல்லையில் நடந்த அந்த மாநாட்டை போல அதிமுகவின் பொன் விழாவுக்கும் ஒரு பெரிய மாநாட்டை நடத்த வேண்டும். அதற்குள் கட்சியை நாம் கைப்பற்றியாக வேண்டும். அல்லது பொதுச் செயலாளர் என்ற முறையில் நானே அந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இந்த அக்டோபர் 17முதல் அடுத்த அக்டோபர் 17 வரை அதிமுகவுக்கு பொன் விழாக் காலம். இதற்குள் நாம் இதை செய்ய வேண்டும்.

ஊரடங்கு காரணமாக எனது நிகழ்ச்சிகளை சற்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். அதற்கு முன்னர் அவர்கள் (பன்னீர், எடப்பாடி) நம் வழிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வேறு சில சக்திகள் பின்னால் இருப்பதால் அவர்கள் பொய் தைரியத்தோடு இயங்குகிறார்கள். மேலும் ஊரடங்கு என்பதால் நான் காத்திருந்தேன். ஆனால் பல்வேறு கட்சியினரும் கட்டுப்பாடுகளை தாண்டி கூட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே ஊரடங்குக்காக நாம் இன்னும் காத்துக்கொண்டிருந்தால், அது என் பலவீனமாகத்தான் பார்க்கப்படும். தீபாவளிக்குப் பின் சுற்றுப் பயணத்தை உறுதியாக தொடங்கவேண்டும். அதிமுகவை கைப்பற்றி அதிமுகவின் பொன்விழா மாநாட்டை அக்கா வெள்ளிவிழா மாநாடு நடத்தியது போல நான் நடத்திக் காட்டுவேன் ” என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில்தான் அக்டோபர் 16ஆம் தேதி ஜெயலலிதா எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துதல், 17ஆம் தேதி சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் நினைவு இல்லம் மற்றும் ராமாவரம் இல்லத்துக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று திட்டமிட்டிருக்கிறார் சசிகலா.

அதிமுகவின் பொன்விழா மாநாட்டை நடத்தப் போவது ஓபிஎஸ்- இபிஎஸ் சா? அல்லது சசிகலாவா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி அதிமுக காத்திருக்கிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 8 அக் 2021