மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

ஜோதிமணி- செந்தில்பாலாஜி: திடீர் மோதல் -ஏன்?

ஜோதிமணி- செந்தில்பாலாஜி:  திடீர் மோதல் -ஏன்?

கரூர் மாவட்டத்தில் திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் கரூர் மக்களவை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணிக்கும் அரசியல் ரீதியான கருத்து மோதல் என இரு கட்சியினரும் முணுமுணுத்து வருகின்றனர்.

கடந்த மக்களவை தேர்தலில் இருந்து கரூர் மாவட்ட அரசியல் களத்தில் ஜோதிமணியும் செந்தில்பாலாஜியும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். தேர்தல் பரப்புரையாக இருக்கட்டும், போராட்டங்களாக இருக்கட்டும் இருவரும் இணைந்தே நடத்தி வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை நேற்று அக்டோபர் 7 ஆம் தேதியோடு முடிவடைந்தது.

இறுதிக்கட்ட பரப்புரையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்ற நிலையில் கரூர் எம்பி ஜோதிமணி பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை. நேற்று மட்டுமல்ல கரூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஒருமுறைகூட ஜோதிமணி பங்கேற்கவில்லை என்கிறார்கள் திமுகவினர்.

இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் கட்டமாக 4ஆம் தேதி திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் மணப்பாறை,விராலிமலை தொகுதிக்கும் 5 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் , அரவக்குறிச்சி தொகுதிக்கும் தேதி கொடுத்திருந்தேன். கரூர் மாவட்டத்தில் இருந்து பதில் இல்லை. ஏன் என்பதை அவர்கள் தான் விளக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சாரத்திற்கு தேதி கொடுத்திருந்தேன். அவர்கள் பதில் அளிக்கவில்லை என்று ஜோதிமணி திமுகவினரைதான் குறிப்பிடுகிறார். அதுவும் குறிப்பாக மாவட்ட செயலாளரான செந்தில் பாலாஜியைதான் குறிப்பிடுகிறார்.

ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்த ஜோதிமணிக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையில் அப்படி என்ன பிரச்சனை என்று கரூர் மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் இருதரப்பிலும் விசாரித்தோம்.

”கரூர் மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்கிறார். மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதனால் இயற்கையாகவே செந்தில்பாலாஜி தான் முன்னிறுத்தப்படுகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்.

இந்த நிலையில் முப்பெருந்துறை துறை அமைச்சர் அவர்களே, மாவட்ட செயலாளர் அவர்களே என்றெல்லாம் செந்தில் பாலாஜியை கூட்டங்களில் குறிப்பிடும்போது, ஜோதிமணியை கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி அவர்களே என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் செந்தில்பாலாஜியை போன்றே தானும் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார் ஜோதிமணி. ஆனால் அதற்கு திமுகவினர் மறுத்ததால், ஜோதிமணி கொஞ்சம் கொஞ்சமாக மாவட்ட நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். அதுவும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஜோதிமணி தலை காட்டுவதில்லை. தனது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாக இருந்தபோதும்... புதுக்கோட்டை போன்ற வெளி மாவட்டங்களில் பிரச்சாரத்துக்கு செல்லும் ஜோதிமணி தன்னுடைய மாவட்டத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்வதற்கு யாருடைய அனுமதி கேட்க வேண்டும்? இன்னும் சொல்லப் போனால் நேற்று (அக்டோபர் 7) ஜோதிமணி தனது வீட்டிலேயே இருந்தபோதும் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்ட இறுதி பிரச்சார நிகழ்ச்சியில் ஜோதிமணி எம்பி கலந்துகொள்ளவில்லை. ஆனால் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

ஜோதிமணி எம்பியான பிறகு பல இடங்களில் நன்றி சொல்லக் கூட போகவில்லை. இதை காங்கிரஸார் தலைமைக்கும் சொல்லிவிட்டார்கள். திமுகவினர் செந்தில்பாலாஜிக்கும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் ஜோதிமணி மீது அதிருப்தியில் இருக்கிறார் செந்தில்பாலாஜி. அமைச்சர் ஆவதற்கு முன் உள்ள செந்தில்பாலாஜி வேறு, அமைச்சரான பின் இருக்கும் செந்தில்பாலாஜி வேறு. அதை ஜோதிமணி இப்போதுதான் புரிந்துகொண்டிருப்பார்” என்கிறார்கள்

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வெள்ளி 8 அக் 2021