மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

விவசாயிகளுக்கு ஆதரவு: வருண் காந்தி பெயர் நீக்கம்!

விவசாயிகளுக்கு ஆதரவு: வருண் காந்தி பெயர் நீக்கம்!

லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த வருண் காந்தியின் பெயர் பாஜகவின் தேசிய நிர்வாக குழு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அவரது தாயும் முன்னாள் அமைச்சருமான மேனகா காந்தியின் பெயரும் இடம் பெறவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கார் மோதியதால் தான் 4 பேர் உயிரிழந்ததாக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியது. இந்நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே விவசாயிகள் மீது காரை ஏற்றும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் வருண் காந்தி, “இந்த வீடியோ மிகத் தெளிவாக உள்ளது. கொலை மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் கொடுமை பற்றிய செய்தி நுழைவதற்கு முன்பு விவசாயிகளின் ரத்தத்திற்குப் பதில் கூற வேண்டும். விவசாயிகளின் ரத்தத்திற்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என்று இன்று காலை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று வெளியிட்டார்.

அதில் வருண் காந்தி, மேனகா காந்தி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் சவுத்ரி விரேந்தர் சிங் ஆகிய முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர். 80 பேர் வழக்கமான உறுப்பினர்களாகவும், 50 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், 179 பேர் நிரந்தர அழைப்பாளர்களாகவும் உள்ளனர்.

நவம்பர் 7ஆம் தேதி இந்த புதிய தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வியாழன் 7 அக் 2021