தொடர்பு கொண்ட முதல்வர்: தடுமாறிய மா.செ.க்கள்!

politics

தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது. இதில், 74.37 சதவிகித வாக்குகள் பதிவானது.

நேற்று வாக்குப்பதிவு ஆரம்பமானது முதல் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பெயர் குழப்பம், வேட்பாளர் விவரம் தெரியாமை, கள்ள ஓட்டு சர்ச்சை, வாக்குப்பதிவில் தாமதம் என பல குளறுபடிகளுக்கிடையே முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

சென்னை பல்லாவரம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட பரங்கிமலை ஒன்றியத்தில் பொழிச்சலூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில், வார்டு உறுப்பினர்,ஊராட்சி தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் ஒட்டப்படவில்லை. இதனால், வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம், வரிசை எண் குறித்த விவரங்கள் தெரியாமல் வாக்காளர்கள் குழப்பமடைந்தனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளும் முறையாக செயல்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தகவலறியந்த பரங்கிமலை எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தொலைபேசி மூலம் தேர்தல் அதிகாரியை தொடர்புக் கொண்டு… “என்ன தேர்தல் நடத்துறீங்க…வாக்குச்சாவடிக்கு முன்பு வேட்பாளர்கள் கட்சி, சின்னம் குறித்த விவரங்களை ஏன் ஒட்டவில்லை. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்” என கோபமாக கூறினார்.

இதற்கு குறுகிய காலம் மட்டுமே இருந்ததால் எங்களால் மாதிரி பேலட் சீட்டை அச்சடிக்க முடியவில்லை என்று தேர்தல் அதிகாரி பதிலளித்தார்.

அதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் சொரையபட்டு கிராமத்தில் திமுகக்காரர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றபோது , அங்கு சென்ற தேர்தல் அதிகாரிகள் 5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அது தங்களுடைய பணம், திருப்பிக் கொடுங்கள் என்று திமுககாரர்கள் வாக்குவாதம் செய்தனர். அப்படியென்றால், இதற்கான ஆவணத்தை காட்டுங்கள் என்று அதிகாரிகள் கேட்ட போது, அவர்களிடம் பதில் இல்லை.

அதனால் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, தாசில்தார் கண்ணன், அவர்களிடமிருந்த 5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்று நேற்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன.

இதற்கிடையில் முதல்வர் அமைச்சர்களுக்கு உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார்.

தேர்தல் நடைபெறும்போது ஒன்பது மாவட்ட அமைச்சர்களும் வாக்குச்சாவடிகளுக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிட்டதால், அமைச்சர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவை கண்காணித்து வந்தனர்.

இதுமட்டுமில்லாமல், வாக்குப்பதிவு ஆரம்பமான முதலே ஒன்பது வருவாய் மாவட்டங்களிலுள்ள திமுக மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய முதல்வர், ”எப்படி தேர்தல் நடக்கிறது. எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. உங்கள் மாவட்டத்தில் எத்தனை சதவிகிதம் வாக்கு வரும்”என்று ஒவ்வொருவரிடமும் விசாரித்தார். 40 வரும், 50 வரும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கூறினர்.

அப்போது, விழுப்புரம் மத்திய மாவட்டத்தின் செயலாளர் புகழேந்தி,” 80 சதவிகிதம் நம்மதான் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.

அதென்ன 80 சதவிகிதம். 100 சதவிகிதம் வெற்றி வராதா என்று முதல்வர் கேட்டதும், அதற்கு அவர், ”இல்ல தலைவரே 80 என்று சொல்லி 100 சதவிகிதம் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். மாறாக 100 என்று சொல்லிவிட்டு 80 சதவிகிதம் வெற்றி கிடைத்தால் கஷ்டம் தானே. அதனால் குறைத்து சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக அதிகளவில் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

இதுபோன்று, தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்களைத் தொடர்புக் கொண்டு நேற்று முதல்வர் பேசியதால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் மா.செ.க்கள்

*வணங்காமுடி*

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *