மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

வசூல்வேட்டை வட்டாட்சியர்!

வசூல்வேட்டை  வட்டாட்சியர்!

பொங்கல் பண்டிகை காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கி வருகிறது தமிழக அரசு. 2021 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலைகளை அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வருவாய்த் துறையினர் மூலமாக நியாய விலை கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு அவர்கள் மூலம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்ததால் மக்கள் அதிகளவு வெளியில் வரமுடியாமல் வேட்டி சேலைகளைப் பலர் வாங்கவில்லை. இதனால், வருவாய்த் துறையினர் பல இடங்களில் நியாய விலை கடைகளுக்கு வேட்டி சேலைகளைக் கொடுக்கவும் இல்லை.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்திலிருந்து சரியான முறையில் வேட்டி சேலைகள் வழங்கப்படவில்லை என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில்தான் பண்ருட்டி வருவாய் ஆய்வாளர் கொளஞ்சியப்பன் கட்டுப்பாட்டிலிருந்த பல்லாயிரம் வேட்டி சேலைகளை, வட்டாட்சியர் பிரகாஷ், வட்டாட்சியர் உதவியாளர் சிவக்குமார் மற்றும் துணை வட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் பூட்டை உடைத்து எடுத்து சென்று தனியார் கடைகளுக்கு விற்பனை செய்துள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, நாம் வருவாய்த் துறை ஆய்வாளர் கொளஞ்சியப்பனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “கடந்த பொங்கலுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டது. எனது லிமிட்டில் 40 ஆயிரம் கார்டுக்கு வழங்கப்பட்டது, அதில் ஒரு பகுதிக்கு 9 ஆயிரம் ரேஷன் கார்டுக்கு 7500 செட் சேலை வேட்டிகள் கொடுத்தனர். அதை வழங்கமுடியாமல் பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரி குலேஷன் பள்ளியில் உள்ள ஒரு அறையில் பத்திரமாக வைத்து பெரிய பூட்டுப் போட்டு வைத்திருந்தேன்.

செப்டம்பர் 1ஆம் தேதி வட்டாட்சியர் பிரகாஷ், உதவியாளர் சிவக்குமார், துணை வட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் எனக்குத் தகவல்கள் கொடுக்காமல் பூட்டை உடைத்து பார்த்துட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு அனைத்து வேட்டி சேலையும் எடுத்துச் சென்று என்ன செய்தார்களோ தெரியவில்லை” என்றார்.

இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்தோம், “வட்டாட்சியர் அலுவலகம் கோயில் போல் இருக்கும். வட்டாட்சியர் மேஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவர். அப்படிப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் இரவானதும் பார் போன்று மாற்றிக் கொள்வார்கள். வட்டாட்சியர் துணை வட்டாட்சியர்கள் அலுவலகத்திலேயே அரட்டை அடிப்பார்கள். இதுபற்றி எந்த புகார் போனாலும் மாவட்ட ஆட்சியரும் கண்டுகொள்ளமாட்டார். அதனால் இவர்களும் முடிந்த அளவுக்குக் கொள்ளையடிக்கின்றனர். இலவச வேட்டி சேலையைத் தனியார் கடையில் விற்பனை செய்த விஷயம் தெரிந்ததும் பண்ருட்டி தாலுகாவில் உள்ள விஏஓ அலுவலகங்களில் பதுக்கி வைத்திருக்கும் வேட்டி சேலையை எடுத்து வரச்சொல்லிப் பொய் கணக்குக் காட்டுகிறார்கள்” என்றார்கள்.

வட்டாட்சியர் பிரகாஷைத் தொடர்புகொண்டு இதுதொடர்பாக பேசினோம், “திருவள்ளுவர் மெட்ரிகுலேஷன் ஸ்கூலுக்கு போய் திறந்து பார்த்தோம்... கொடுக்கப்பட்ட வேட்டி சேலை வழங்காமலிருந்தது. அதைக் கைப்பற்றினோம். வேறு ஒன்று இல்லை” என்றார்.

அப்போது அவரிடம் எத்தனை செட்டு வேட்டி சேலைகள் இருந்தன என்று கேட்டதற்கு, இரண்டாயிரம், மூவாயிரம், நாலாயிரம் இருக்கும் என்று அடுக்கினார்.

வருவாய் ஆய்வாளர் கட்டுப்பாட்டிலிருந்த வேட்டி சேலைகளை, பூட்டை உடைத்து எடுத்துப் போனதாகச் சொல்கிறார்களே? அதுவும் மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் தகவல் சொன்ன பிறகு சில நாட்களுக்கு முன்புதான் குறைவான வேட்டி சேலைகளைக் கணக்குக் காட்டுவதாகச் சொல்கிறார்களே? என்ற கேள்விகளுக்கு, ‘அது ஒன்றும் இல்லை விடுங்கள்’ என்று சமாளித்தார்.

மேலும் வட்டாட்சியர் அலுவலகம் இரவில் பாராக மாற்றப்படுவதாகவும், எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தாலுகா ஆபீஸ் தலைகீழாக மாறியுள்ளதாகவும் சொல்கிறார்களே என கேள்வி எழுப்பினோம். அதற்கும் அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை.

இதனிடையே, பண்ருட்டி நகரம் ஏ.மணிநகரில் வசிக்கும் மக்கள், தாசில்தார் பிரகாஷ், உதவியாளர் சிவக்குமார் மற்றும் துணை வட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், எங்களுக்குத் தர வேண்டிய இலவச வேட்டி சேலைகளைத் திருட்டுத் தனமாக விற்றுவிட்டார் பிரகாஷ். அதோடு பிரகாஷ், கிருஷ்ணன் இருவரும் மணல் ஏற்றிவந்ததாகப் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை விற்று பணம் சம்பாதித்தனர்.

சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பன்னீர் செல்வம் ஒருபடி மேலே போய், முதியோர் உதவித் தொகை, குடும்பத் தலைவர் இறந்தால் பெறும் உதவித் தொகை, ஊனமுற்றோருக்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு புரோக்கர்கள் மூலம் ரூ.2000 லஞ்சம் வாங்குகிறார்.

இவர்களைப் போன்று பண்ருட்டி டிஎஸ்ஓ (தாலுகா சப்ளை அதிகாரி) மோகன் தொட்டதற்கெல்லாம் காசு வாங்குவார். பெயர் நீக்கினால் 100 ரூபாய், பெயர் சேர்த்தால் 100 ரூபாய், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்ய 100 ரூபாய், புதிய குடும்ப அட்டைக்கு ரூ.1500 சிறப்பு கட்டணமாக வசூலிப்பார்.

இந்த அதிகாரிகள் எல்லாம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கும் லூட்டியை தாங்க முடியவில்லை. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 7 அக் 2021