மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

லெக்கிம்பூர்: கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருடன் ராகுல், பிரியங்கா

லெக்கிம்பூர்:  கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருடன் ராகுல், பிரியங்கா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர், பஞ்சாப் முதல்வர்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு நேற்று (அக்டோபர் 6) இரவு உபி மாநிலம் லெக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்தனர்.

அக்டோபர் 3 ஆம் தேதி லெக்கிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகளின் போராட்டத்தின் மீது ஜீப், கார்கள் ஏற்றப்பட்டு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அந்த கார் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிசுடையது என்று சர்ச்சை வெடித்தது. அங்கே அதன் பின் ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நீதி வேண்டியும், அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் பிரியங்கா காந்தி, முன்னாள் உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் போன்றோர் முயன்றும் முடியவில்லை பிரியங்காவை எவ்வித பதிவும் இல்லாமல் சட்ட விரோதமாக லெக்கிம்பூர் அருகே உள்ள சீதாபூரில் ஒரு கெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்திருந்தனர் உபி போலீஸார். கொல்லப்பட்ட விவசாயிகளின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகுதான் தலைவர்களுக்கு அப்பகுதிக்கு செல்ல அனுமதி அளித்தது உபி அரசு.

நேற்று டெல்லியில் இருந்து இரு காங்கிரஸ் முதல்வர்களுடன் லக்னோ புறப்பட்ட ராகுல் காந்தி லக்னோ விமான நிலையத்துக்கு வந்தபோது போலீஸ் வாகனத்தில்தான் லெகிம்பூருக்கு செல்ல வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். இதை எதிர்த்து ராகுல் மற்றும்

முதல்வர்கள் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் பூபேஷ் பாகேல் ஆகியோர் விமான நிலையத்திலேயே தர்ணா நடத்தியதால் அவர்களின் சொந்த வாகனங்களிலேயே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

லக்னோ விமான நிலையத்தில் புறப்பட்ட ராகுல் காந்தியும் முதல்வர்களும் சீதாபூருக்கு மாலை சென்றனர். அங்கே கெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தியை சந்தித்து அவரையும் அழைத்துக்கொண்டு நேற்று இரவு லெக்கிம்பூரில் உள்ள பாலியா கிராமத்தை அடைந்தனர். அக்டோபர் 3 அன்று கொல்லப்பட்ட விவசாயிகளில் ஒருவரான லவ்ப்ரீத் சிங்கின் குடும்பத்தை சந்தித்தார்கள். அவர்களின் குடும்பத்தினரை அணைத்து ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்ததாக,

நிக்காசன் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராமன் காஷ்யப்பின் வீட்டுக்குச் சென்றனர். அதன் பின் தௌராஹா தாலுகாவில் உள்ள நச்சதர் சிங்கின் வீட்டுக்குச் சென்றனர். இரவு நேரமாகிவிட்டதால் மீதமுள்ள குடும்பத்தினரை இன்றைக்கு பிரியங்கா காந்தி சந்திக்கிறார்.

பாலியா லக்கிம்பூர் நகரத்திலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து நிக்காசன் 15-20 கிமீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து தௌராஹா 60-70 கிமீ தொலைவில் உள்ளது. லக்னோவில் இருந்து 225 கிலோ மீட்டர் பயணித்து லெக்கிம்பூர் அடைந்து அங்கிருந்து சுமார் 170 கிலோ மீட்டர் பயணம் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள் ராகுலும் பிரியங்காவும்.

இரண்டு விவசாயிகளும் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலின் நிருபரும் லெக்கிம்பூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள், அதே நேரத்தில் அக்டோபர் 3 சம்பவத்தில் இறந்த மற்ற இரண்டு விவசாயிகள் பக்கத்து பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாங்கள் இன்று சந்தித்த மூன்று குடும்பங்களுக்கும் நீதி வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. மூன்று குடும்பங்களும் இழப்பீடு பற்றி கவலைப்படவில்லை ஆனால் நீதி வேண்டும் என்று ஒரு விஷயத்தை கூறியுள்ளனர். ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். அவர் உள்துறை இணை அமைச்சராக இருப்பதால் பாரபட்சமற்ற விசாரணை சாத்தியமில்லை. அவர் ராஜினாமா செய்யும் வரை இந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்காது.

எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரின் மகனும் கைது செய்யப்பட வேண்டும். எஃப்ஐஆரும் இல்லாமல் எந்த எழுத்துபூர்வ உத்தரவும் இல்லாமல் எங்களை கைது செய்ய முடிகிறது. ஆனால் எஃப்.ஐ.ஆரில் பெயர் இருக்கும்போது ஏன் அவரை கைதுசெய்ய முடியவில்லை? ” என்று கேள்வி எழுப்பினார் பிரியங்கா.

ராகுல் காந்தி பேசும்போது, “இந்த கொலையை செய்தவர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும். அவர்கள் கைது செய்யப்படும் வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்காது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் என்ன எழுதியிருக்கிறது என்றே எங்களுக்குப் புரியவில்லை என்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் ஓயாது”என்றார்.

ராகுல், பிரியங்காவை அடுத்து இன்று பல தலைவர்களும் லெக்கிம்பூர் பகுதிக்குப் படையெடுக்கின்றனர்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 7 அக் 2021